அ.தி.மு.க. தலைமை அலுவலத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன!

அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன. இரு அணிகள் பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் பேனர்கள் அகற்றம் இணைப்புக்கான சாதக சூழலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக நேற்று (செவாய்க்கிழமை) ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினால் ஏற்பட்ட துயரம் தமிழக மக்களின் இதயத்தைவிட்டு இன்றும் அகலவில்லை. அவரது மர்ம மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற விசுவாசத் தொண்டர்களின் குரல் தான், தமிழக மக்களின் குரல் தான் நாங்கள் தொடங்கியிருக்கும் தர்மயுத்தத்தின் குரல்.

விசுவாசத் தொண்டர்களின், தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அந்த தர்மயுத்தத்தின் வீரியத்தைக் குறைப்பதற்கு சிலர் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தர்மயுத்தத்தின் வீரியம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

சசிகலாவின் புகைப்படங்களை அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலையிலேயே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டன.

இன்று அமாவாசை தினமாக இருப்பதாலும், புதிய முயற்சிகளுக்கு உகந்த நாள் என்பதாலும், இன்றே ஓ.பி.எஸ். அணியும், இ.பி.எஸ். அணியும் இணைப்புக்கான பேச்சுவார்த்தையை தொடங்க  வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.