தொண்டர்கள் விரும்பினால் தனித்து போட்டி: சரத்குமார் காமெடி!

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி. தற்போது இக்கட்சியை கழற்றிவிடும் மனநிலையில் அதிமுக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருக்கும் சரத்குமார், “தொண்டர்கள் விரும்பினால் தனித்துப் போட்டியிடவும் தயார்” என கூறியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று சரத்குமார் பேசியதாவது:

அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் இதுவரை இருந்து வருகிறோம். தொண்டர்கள் விரும்பினால் தனித்துப் போட்டியிடவும் சமக தயாராக உள்ளது. பேரவைத் தேர்தலில் கூட்டணியாக தேர்தலைச் சந்தித்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்.

சமகவின் தேர்தல் அறிக்கை 10 தினங்களில் வெளியிடப்படும். பொருள்களைவிட கல்வியை ஆட்சியாளர்கள் இலவசமாகக் கொடுத்தால் மட்டுமே நாடு முன்னேறும். மக்களும் இலவசங்களைப் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு சரத்குமார் பேசினார்.