பா.ஜ.க. கூட்டணி: சரத்குமார் உள்ளே! விஜயகாந்த் வெளியே!!
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார். ஆனால், அதிமுக தங்களை வளரவிடவில்லை என்றும், கறிவேப்பிலையாகப் பயன்படுத்தியது என்றும் பரபரப்பாக குற்றம்சாட்டி, அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக கடந்த வாரம் சரத்குமார் அறிவித்தார். அதன்பின் அவர் கடந்த சில தினங்களாக இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் பாணியில் கழுத்தில் காவித் துண்டுடன் பொதுநிகழ்ச்சிகளில் காட்சியளித்தார்.
இந்நிலையில், சென்னை வந்துள்ள தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகரை, அவர் தங்கியிருக்கும் தனியார் நட்சத்திர ஹோட்டலில் சனிக்கிழமை இரவு சரத்குமார் நேரில் சந்தித்தார். அப்போது தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் நரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது, சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பா,ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து, வருகிற தமிழக சட்ட்ப்பேரவைத் தேர்தலை சந்திப்பது என முடிவானது.
பின்னர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், இதை உறுதி செய்தார். “வரவிருக்கும் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து பேரவைத் தேர்தலை சந்திக்கும். எங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்” என்றார் அவர்.
2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சரத்குமாரும், விஜயகாந்தும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து இருந்தனர். ஆனால் அக்கூட்டணியை விட்டு விஜயகாந்த் வெளியேறிய பிறகு இருவரும் கீரியும் பாம்பும் போல ஆகிவிட்டனர். அதனால் தான் சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில்கூட சரத்குமாரை ஆதரிக்க மறுத்துவிட்டார் விஜயகாந்த். மேலும், கடந்த சில தினங்களாக விஜயகாந்த் குறித்தும், அவர் பொது இடங்களில் பிறரை அடிப்பது குறித்தும், காஞ்சிபுரம் மாநாட்டில் புரிந்துகொள்ள முடியாதபடி அவர் பேசியது குறித்தும் சரத்குமாரின் மனைவி ராதிகா தொடர்ந்து கடுமையாக நக்கலடித்து வருகிறார். இது விஜயகாந்த், அவரது குடும்பத்தினர், மற்றும் தே.மு.தி.க.வினர் மத்தியில் கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, சரத்குமார் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் பேச்சுக்கே இடமில்லை என்கிறது விஜயகாந்த் வட்டாரம்.
இன்று மதியம் விஜயகாந்த் வீட்டுக்கு வந்து அவரை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பா.ஜ.க. கூட்டணியில் சேருமாறு நேரில் அழைப்பு விடுத்தார். ஆனால் விஜயகாந்த் பிடி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.