சண்டிக்குதிரை – விமர்சனம்
நாயகன் ராஜ்கமல் மண் பொம்மைகள் செய்யும் தொழில் செய்பவர். அதோடு, அவ்வப்போது ஊர் தலைவர் சொல்லும் சில எடுபிடி வேலைகளையும் செய்து வருபவர். அந்த ஊர் தலைவருக்கு காதல் பிடிக்காது. இருப்பினும், ராஜ்கமலும், அவரது வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நாயகி மானசாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள்.
ராஜ்கமலின் பக்கத்து வீட்டிலேயே வசிக்கும் டெல்லி கணேஷின் மகளான திவ்யா, ராஜ்கமலிடம் சிறுவயதிலிருந்து அண்ணன் என்ற முறை சொல்லி உரிமையுடன் பழகி வருகிறார். பிளஸ் 2 படிக்கும் அவருக்கும், காலேஜ் படிக்கும் ஹரிக்கும் காதல். ஒருநாள் இவர்கள் தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிப்பதை பார்க்கும் ராஜ்கமலின் நண்பர், திவ்யாவை திட்டி தீர்க்கிறார். இதனால் கோபமடைந்த திவ்யா பதிலுக்கு அவரை திட்டி அவமானப்படுத்துகிறார். இதனால் ராஜ்கமல் நண்பர், திவ்யா மீது கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி செல்கிறார். இது ராஜ்கமலுக்கு தெரிய வரவே, தனது நண்பரை அழைத்து சமதானப்படுத்துகிறார்.
ஒருநாள் ஹரியும், திவ்யாவும் தனிமையில் சில்மிஷம் செய்வதை ஹரி தனது செல்போனில் படம் பிடிக்கிறார். இது பிடிக்காத திவ்யா, ஹரியின் செல்போனை புடுங்கி அந்த வீடியோவை அழித்து விடுகிறார்.
பின்னர் ஒருநாள் திவ்யாவின் செல்போனுக்கு அவர்கள் சில்மிஷம் செய்த வீடியோ, தெரியாத ஒரு நம்பரிலிருந்து வருகிறது. இது ஹரியின் வேலையாகத்தான் இருக்கும் என்று நினைத்து, அவரிடம் சென்று பயங்கரமாக சண்டை போட்டு விட்டு வீடு திரும்புகிறார் திவ்யா. பின்னர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.
ஆனால், உண்மையில் திவ்யா தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது ராஜ்கமலுக்கு தெரிய வருகிறது. இதற்கிடையில் ராஜ்கமலின் காதலியான மானசாவின் தம்பி மலைப்பகுதியில் கொலை செய்யப்பட்டும், மானசா பயங்கரமாக தாக்கப்பட்டும் கிடக்கிறார்கள்.
இந்த கொலைகள் மற்றும் தாக்குதல்களை செய்வதற்கு யார்? எதற்காக செய்கிறார்கள்? என்பதை ராஜ்கமல் எப்படி கண்டறிந்தார் என்பதே மீதிக்கதை.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்திருக்கும் ராஜ்கமல், சின்னத்திரையில் நடித்தது போன்றே பெரிய திரையிலும் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் கொடுத்த ஓவர் ஆக்டிங்கை பெரிய திரைக்கும் கொடுத்திருப்பதால், இவரது நடிப்பு எடுபடவில்லை. செண்டிமென்ட், எமோஷன் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு ரொம்பவும் அதிகமாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை.
கதாநாயகியாக வரும் மானசாவின் கதாபாத்திரத்திற்கு சரியாக வலு இல்லாவிட்டாலும், கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு காதல் ஜோடியாக வரும் ஹரி -திவ்யாவின் காதல் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. திவ்யாவை சுற்றித்தான் கதையே நகர்ந்து செல்கிறது. அதனால், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார் திவ்யா.
டெல்லிகணேஷின் அனுபவ நடிப்புக்கு இந்த படம் தீனி போடவில்லை. மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் யாரும் பெரிதாக மனதில் பதியவில்லை.
இயக்குனர் அன்புமதி, இந்த படத்தின் கதையை வித்தியாசமாக எழுதியிருந்தாலும் காட்சியப்படுத்திய விதத்தில் கோட்டை விட்டுவிட்டார். படத்தை ரசிக்க முடியாத அளவுக்கு காட்சிப்படுத்தியது ரசிகர்களை சோர்வடைய வைத்திருக்கிறது. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வீராவின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். வரஸ்ரீயின் இசையில் பாடல்கள் சுமார். என்றாலும், பின்னணி இசை கதையின் ஓட்டத்தை ஓரளவுக்கு தூக்கி நிறுத்தியிருக்கிறது.
‘சண்டிக்குதிரை’ – நொண்டிக்குதிரை!