“1000 ரூபாய்க்காக 3 மணிநேரம் நின்றிருக்கிறேன்”: சமந்தா அனுபவம்!
தமிழ், தெலுங்கு படவுலகுகளில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தா, திரைத்துறைக்கு வருவதற்குமுன் தான் பட்ட கஷ்டங்களை ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
ஒவ்வொருவரும் உழைத்து எவ்வளவு பெரிய உயர்ந்த இடத்துக்கு போனாலும், தான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை மறக்க கூடாது. கஷ்டப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் ஒவ்வொன்றும் விலை மதிக்க முடியாத பாடங்கள். திரும்ப திரும்ப அவற்றை நினைத்துப் பார்ப்பது எதிர்காலத்துக்கு உந்துசக்தியாக இருக்கும்.
நான் இப்போது சினிமாவில் பெரிய இடத்தில் இருக்கிறேன். அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் பட்டியலில் நானும் இருக்கிறேன் என்று பேசுகிறார்கள். இப்படிப்பட்ட நான் ஒரு காலத்தில் ஆயிரம் ரூபாய்க்காக மூன்று மணி நேரம் நின்றிருக்கிறேன்.
14 வயதில் இருந்து எனது தேவைகளுக்காக நானே சம்பாதிக்க ஆரம்பித்தேன். வீட்டில் பணம் கேட்பது இல்லை. அப்போது எத்தனையோ சிறு சிறு வேலைகளை செய்து இருக்கிறேன். திருமணங்கள் நடக்கும்போது மண்டப வாசலில் இரண்டு, மூன்று இளம்பெண்கள் நின்று திருமணத்துக்கு வருவோர் மீது பன்னீர் தெளிப்பதை பார்த்து இருப்பீர்கள். அந்த பன்னீர் தெளிக்கும் வேலையை நான் செய்து இருக்கிறேன்.
மூன்று மணி நேரம் மண்டப வாசலில் நின்று பன்னீர் தெளித்த பிறகு எனக்கு சம்பளமாக ரூ.1,000 தருவார்கள். பணம் எவ்வளவு சம்பாதித்தோம் என்பது முக்கியம் இல்லை. அதை உழைத்து சம்பாதித்தோமா என்பதுதான் முக்கியம். அந்த நினைப்பே பெரிய திருப்தியை கொடுக்கும். இப்போது எவ்வளவுதான் நான் சம்பாதித்தாலும் திருமண மண்டபத்தில் பன்னீர் தெளித்து சம்பாதிக்கும்போது இருந்த ‘கிக்’ இல்லை.
இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.