சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை – விமர்சனம்
நடிப்பு: ருத்ரா, சுபிக்ஷா, வினோத் சாகர், சுப்புலட்சுமி
இயக்கம்: மகேஷ் பத்மநாபன்
இசை: ராஜேஷ் அப்புக்குட்டன்
ஒளிப்பதிவு: பிஜு விஸ்வநாத்
எப்படி வேண்டுமானாலும் “வளைந்துகொடுத்து’, தனது துறையில் சாதித்து, பேரும் புகழும் பெற வேண்டும் என்று இயங்குகிற ‘சுயநல லட்சியப்பெண் (ambitious woman)’ ஒருத்தியை, அவள் போலல்லாத, குடும்பப் பாங்கான எளிய இளைஞன் ஒருவன் காதலித்தால் என்னாகும் என்பது இப்படத்தின் ஒருவரிக்கதை.
நாயகி ஸ்ருதி (சுபிக்ஷா) வானொலியில் பணிபுரிந்து வருகிறாள். தனது மேலதிகாரிக்கு ”வளைந்துகொடுத்து”, காடுகளிலும் மலைகளிலும் ஒலிக்கும் இயற்கை ஒலிகளைப் பதிவு செய்யும் அசைன்மெண்டை பெறுகிறாள். இதற்காக ஒலிப்பதிவு செய்வதில் கைதேர்ந்த ஒரு நபரைத் தேடிச் செல்கிறாள். அப்பொழுது நாயகன் கதிர் (ருத்ரா) என்ற ஒலிப்பதிவு வல்லுனரின் அறிமுகம் அவளுக்குக் கிடைக்கிறது. இருவரும் சேர்ந்து ஒலிப்பதிவு செய்ய பயணிக்கிறார்கள். அந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து கதிருக்கு மது மற்றும் படுக்கை விருந்தளித்து, பிரியாவிடை பெற்று செல்கிறாள் ஸ்ருதி..
கதிர் பதிவு செய்து கொடுத்த ஒலிகளுக்காக ஸ்ருதிக்கு மிகப்பெரிய விருது, பாராட்டு கிடைக்கிறது. கதிரின் பங்களிப்பை மறைத்துவிட்டு, தனது திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாக ஸ்ருதி இதைக் காட்டிக்கொள்கிறாள்.
இப்போது மேளதாள இசையை துல்லியமாக பதிவு செய்யும் வெளிநாட்டு அசைன்மெண்ட் ஸ்ருதிக்குக் கிடைக்கிறது. கிடைப்பதற்கு அரிய இந்த அசைன்மெண்ட்டை வெற்றிகரமாக செய்து முடிக்க கதிரின் உதவி தேவை என்ற நிலையில், கதிரைத் தேடி வருகிறாள் ஸ்ருதி. காதல்வலை விரிக்கிறாள். அதில் விழும் கதிர், அவளுடன் காதலுடன் புறப்பட்டுச் சென்று, அவளுடனே தங்கி, உதவி செய்துவருகிறான். இந்நிலையில், புதிய அசைன்மெண்ட்டின் மேலதிகாரியான ஒரு வெள்ளைக்காரனுடன் ஸ்ருதி நெருங்கிப் பழகுவதைக் கண்டு கதிர் அதிர்ச்சி அடைகிறான். அதன்பின் அவன் என்ன செய்தான்? அவனது காதல் என்ன ஆனது? என்பது மீதிக்கதை.
ஏற்கனவே மலையாள திரைப்படத்தில் நடித்திருக்கும் ருத்ரா, இந்த படத்தின் மூலம் தமிழ்ப்பட நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
’கடுகு’, ’கோலி சோடா 2’ போன்ற படங்களில் நடித்திருக்கும் சுபிக்ஷா. இந்த படத்திலும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.
சிறிய கதையை வைத்துக்கொண்டு ஒரு முழு நீள திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பத்மநாபன். கதையிலும் திரைக்கதையிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவு பணியை சரியாக செய்து முடித்திருக்கிறார் பிஜு விஸ்வநாத். ராஜேஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ – தித்திப்பு!