சக்க போடு போடு ராஜா – விமர்சனம்
‘நகைச்சுவை ஹீரோ’ என்ற முத்திரையை அழித்துவிட்டு, ‘அதிரடி ஆக்சன் ஹீரோ’ என பெயர் வாங்குவதற்காக சந்தானம் நடத்தியிருக்கும் ‘ஆசிட் டெஸ்ட்’ தான் ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படம்.
கதை நாயகன் சந்தானத்தின் நண்பர் சேது. இவரும் கொடூர ரவுடியான சம்பத்தின் தங்கை பாப்ரி கோஷூம் காதலிக்கிறார்கள். ரவுடி சம்பத்தின் எதிர்ப்பை மீறி, காதலர்கள் இருவருக்கும் சந்தானம் திருமணம் செய்துவைத்து, சென்னையிலிருந்து பத்திரமாக வெளியூருக்கு அனுப்பி விடுகிறார். இதனால் சந்தானத்தை கொலை செய்ய தீர்மானித்து, தேடுதல் வேட்டையில் இறங்குகிறார் சம்பத். அவரிடம் சிக்காமல் இருக்க பெங்களூரு செல்லும் சந்தானம், அங்கு நாயகி வைபவியைச் சந்திக்கிறார். காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ரவுடி சம்பத்தின் இரண்டாவது தங்கை தான் வைபவி என்பது தெரிய வருகிறது. சம்பத் ஏற்படுத்தும் ஆபத்துகளைக் கடந்து சந்தானம் எப்படி காதலில் வெற்றி பெறுகிறார் என்பது ‘சக்க போடு போடு ராஜா’ படக்கதையின் அடித்தளம்.
கதையில் புதுமை இல்லாததால் தானோ என்னவோ, தனது தோற்றத்திலாவது மாற்றம் செய்யலாம் என முயன்றிருக்கிறார் சந்தானம். ஆனால், அவரது தோற்ற மாற்றமும், சிகை அலங்காரமும் அவருக்கு கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை. வழக்கம் போல ஆங்காங்கே சில காமெடி பஞ்ச் பேசியிருக்கிறார். ஆனால் சிரிப்பே வரவில்லை. ரோப் கட்டி பறக்கும் சண்டைக் காட்சிகளும், அப்போது அவர் பேசும் ஆக்சன் பஞ்ச்களும் ‘கெக்கே பெக்கே’ என நக்கலாக சிரிக்க வைக்கின்றன. ஒருவர் தன் உயரம் தெரியாமல் அதீத நம்பிக்கையுடன் ஆடினால் என்ன ஆகும் என்ற விபரீத பாடத்தை இந்த படம் சந்தானத்துக்கு போதிக்கும் என நம்பலாம்.
நாயகி வைபவி படம் முழுக்க கிளாமராக வருகிறார். ஆமாம், வருகிறார். ஆமாம், ஆமாம், வருகிறார். வந்து…? போய் விடுகிறார். போயே விடுகிறார்.
வில்லனாக வரும் சம்பத், வழக்கமான முட்டாள் வில்லனாக வந்து எரிச்சலூட்டுகிறார். ஆக்சன் படம் என்றால் அதில் வில்லன் கதாபாத்திரம் புதுமையாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்; அப்போது தான் அதற்கு எதிரான ஆக்சன் ஹீரோ கதாபாத்திரம் கூட எடுபடும் என்ற பாலபாடம் தெரியாத அரைவேக்காடுகள் கூடி ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார்கள். என்னத்தைச் சொல்ல…?
விவேக், மயில்சாமி, ரோபோ சங்கர், விடிவி கணேஷ் என நிறைய நகைச்சுவை நடிகர்கள் படத்தில் இருந்தாலும், அத்தனை பேரும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனைய நடிகர்களும் தான். ஒருவர் கூட மனதை ஈர்க்கவில்லை.
அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும், சிம்புவின் இசையும் ஓகே ரகம். ‘காதல் தேவதை’, ‘கலக்கு மச்சான்’ பாடல் வரிகள் ரசிக்க வைக்கின்றன.
காதலித்தாலும் குடும்பத்தினரின் சம்மதத்தோடு தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். ஆனால், வ்லிமையில்லாத கதாபாத்திரங்கள், லாஜிக் மிறல்கள், நம்பமுடியாத காட்சியமைப்புகள், ஏற்கெனவே பல படங்களில் அரைத்த மசாலா… என மொத்தமாக சொதப்பி கொட்டாவி விட வைத்துவிட்டார்.
‘சக்க போடு போடு ராஜா’ – சக்கை!