“நீங்கள் இறப்பதற்குமுன் பார்க்க வேண்டிய 50 படங்களில் ஒன்று – சாய்ராட்!”

முதல்முறையாக ஒரு படம் முடிந்து டைட்டில் கார்டுகளும் முடிந்தபிறகும் எழ மனமில்லாமல் திரையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

இந்திய சினிமாவிற்கு பழக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பையன் – ஆதிக்க சாதி பெண் காதல் கதை தான். ஆனால் அந்த கொண்டாட்டங்களைத் தாண்டி, ஆண்ட பரம்பரையின் சாதிவெறி எதுவரை ஆழப் பாயும் என்பதை முகத்தில் அறைந்து சொல்கிறது ‘சாய்ராட்’.

பதின்ம வயதில் காதல் வரும்பொழுது விவரிக்க முடியாத ஒரு கொண்டாட்ட உணர்வு தலைதூக்கும். எதிர்பாலினம் பார்க்கையில், சிரிக்கையில், முடியை ஒதுக்குகையில்… என்று சின்னச் சின்ன விஷயங்கள்கூட மூச்சு முட்ட வைக்கும். அந்த உணர்வை அத்தனை நுணுக்கமாக காட்சிப்படுத்துவதோடு பார்வையாளர்களுக்கும் அதை கடத்துவதும் பெரும்பாடு. அதை இயல்பாக செய்திருக்கிறார் இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே. பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்ட விதங்கள் எத்தனை அற்புதம்.

காதல், பார்வை, ஸ்பரிசம், இசை என கொண்டாட்டமாய் செல்லும் படம் மெல்ல மெல்ல இன்னொரு கட்டத்திற்கு இயல்பாய் நகர்கிறது. நிஜ வாழ்வில் இரண்டு காதலர்கள் தனியே வாழும்போது நடக்கும அத்தனையும் யதார்த்தமாய் நடக்கிறது. இந்த பகுதியில் நாயகன் திடீரென கோபப்படுவதும், அடிப்பதும் மட்டும் செயற்கையாய் பட்டது. நிச்சயம் இது போன்ற சண்டைகள் வரும்தான். நானே அனுபவித்திருக்கிறேன். ஆனால் அது ஆரம்பிக்கும் விதம், காட்டப்பட்ட விதம் ஒருவித அவசரத் தன்மையுடன் இருப்பதாக பட்டது. உடனடியாக அந்த கதாபாத்திரம் தன்னியல்பை விட்டு ஒரேடியாக மாறுவது சிறிய உறுத்தல். அதைத் தாண்டி அந்த பிரிவு, மீண்டும் சேர்வது, காதல் என அத்தனையும் வாழ்வோடு எளிதாக பொருத்திக் கொள்ள முடிகிறது.

கடைசியில் க்ளைமேக்ஸ். இதுதான் நடக்கப் போகிறது என்று நிச்சயம் தெரிகிறது. ஆனால் நடந்துவிடுமோ என்கிற பதைபதைப்பு நொடிக்கு நொடி ஏறுகிறது. அர்ச்சனா தண்ணீர் கொடுக்க, பர்ஷ்யா டீ கொடுக்க, கிச்சனைத் தாண்டும் போதெல்லாம் அந்த பதட்டம் தொற்றுகிறது. இப்படி செய்துவிடுவார்களோ என்ற பயம் நமக்கு வருவதே ஆணவக் கொலைகாரர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்.

இறுதியில் அந்த ஆணவக் கொலைகள் காட்சிப்படுத்தப்பட்ட விதம், அந்த திரைமொழி, குழந்தையின் ரத்தம் பதிந்த பாதச்சுவடு – ப்யூர் சினிமா. உன்னதம். ஃபன்றியின் இறுதிக்காட்சி வலியோடு சேர்த்த ஒரு கைத்தட்டலை உண்டு பண்ணியதென்றால் இந்த இறுதிக்காட்சி பேசவிடாமல், அசைய விடாமல் அடித்துப் போட்டுவிடும்.

அதிகாரங்களும் சொத்துக்களும் வீழ்ந்த பிறகும் கூட, விடாமல் தொற்றிக் கொண்டிருக்கும் சாதிவெறி மிக நுணுக்கமான பதிவு. கமர்ஷியல் முலாம் பூசி எடுக்கப்பட்ட படம்தான். ஆனால் சமூக அரசியல் தெரிந்த, திரைமொழி கைவந்த ஒரு கலைஞன், கமர்ஷியல் சினிமாவை எத்தனை லாவகத்துடன் கையாளுவான் என்பதற்கு மிகச் சிறப்பான உதாரணம் சாய்ராட். அதை உறுதிப்படுத்தி மராத்திய திரை வரலாற்றில் இதுவரை இல்லாத வசூலை வாரிக் குவித்து பிரமாண்டமான வெற்றியை பெற்றிருக்கிறது சாய்ராட்.

‘நீங்கள் இறப்பதற்கு முன்பு பார்க்கவேண்டிய 50 படங்கள்’ என ஆங்கிலப் படங்களை பற்றிய பல லிஸ்ட்களை பார்த்திருப்பீர்கள். அந்த வார்தைப் பிரயோகம் வெகுவாக கவர்ந்திழுத்திருக்கிறது. அதுபோல் ‘நாம் இறப்பதற்கு முன்பு பார்க்க வேண்டிய 50 இந்திய படங்கள்’ என்று பட்டியலிட்டால் அதில் கம்பீரமாய் இடம்பெறும் ‘சாய்ராட்’.

  • ஜெயசந்திர ஹஷ்மி