ஆங்கிலத்தை “கொலை” செய்த மாணவியை பாராட்டிய கலெக்டர்!
“தமிழில் ஆங்கிலம் கலந்து தமிழ் கொலை செய்யப்படுவதையே கண்டுவந்த எனக்கு, ஒரு ஏழை கிராமத்து அரசுப்பள்ளி மாணவி, முதன்முறையாக ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து ஆங்கிலத்தைக் கொலை செய்ததைக் கண்டு அந்த மாணவியை பாராட்டினேன்” என்றார் சகாயம் ஐ.ஏ.எஸ்.
தமிழ் மொழியறிஞர் குணா எழுதிய ‘தமிழரின் தொன்மை’ நூல் வெளியீட்டு விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ். ஆற்றிய உரை (பகுதி3):-
நான் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது அங்குள்ள கிராமங்களுக்கு அடிக்கடி நேரில் சென்று விவசாயிகள், சுயஉதவிக்குழு பெண்கள், அரசுப்பள்ளி மாணவர்கள் ஆகியோரை சந்திப்பது வழக்கம். அப்படி ஒருமுறை ஒரு அரசுப்பள்ளிக்கு சென்று, அங்குள்ள மாணவர்களிடம், அவர்களின் ஆங்கில மொழியறிவை சோதிக்கும் விதமாகச் சில கேள்விகள் கேட்டேன்.
What’s ur name..? என்றால் எல்லாப் பிள்ளைகளும் பதில் சொல்லி விடுவார்கள் என்பதால் What’s ur father? என்று கேட்டேன்..
பல பிள்ளைகளும் சரியாக my father is farmer,
my father is weaver,
my father is driver
my father is tailor
என்று சொல்லிக்கொண்டே வந்தனர்.
அதில் தேவகி என்ற மாணவி, “my father is working in உரக்கடை” என்று சொன்னாள். அந்த ஏழை கிராமத்துப் பெண் பிள்ளைக்கு ‘உரக்கடை’க்கு ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. பார்த்தாள் அந்தப் பெண். ’இவரு நம்மாளுதானே.. கலெக்டர் நம்மள மாதிரி தமிழ் பேசுறவர்தானே. புரியணும் அவளோதானே.. எதுக்குத் தேவையில்லாத பம்மாத்து’ என்று ஆங்கில வாசகத்தில் அவளுக்குத் தெரிந்த தமிழைச் சேர்த்தாள்.
நான் உடனே “அருமை…” என்று அந்த மாணவியைப் பாராட்டினேன். பொதுவாக, விழாக்களில் எனக்கு இடும் சால்வைகளை நான் ஏற்பதில்லை. அதையும் மீறி இட்டுவிட்டால் அதை பிள்ளைகளுக்கு வழங்கிவிடுவேன், அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக. அதேபோன்று அன்றும் தேவகி என்ற அந்த மாணவிக்கு சால்வையைப் போர்த்தி, பாராட்டி உற்சாகப்படுத்தினேன்.
ஏன் தெரியுமா..?
உலகின் மிக மூத்த இலக்கண, இலக்கிய வளமுடைய எம்முடைய தமிழ்மொழி எப்படிச் சிதைவுறுகிறது தெரியுமா..? இப்போதுகூட வரும் வழியில்.. இந்த அரங்கிற்கு வருவதற்கு வழிகேட்டபோது.. ஒரு தானி ஓட்டுனர் சொன்னார்.. “ஸ்ட்ரைட்டா போயி லெப்ட்ல கட் பண்ணி.. (அவர் தமிழ்லதான் பேசுகிறார்) திரும்ப ரைட்ல டெர்ன் பண்ணி ஆப்போசிட்ல பார்த்தா ஒரு ஹால் இருக்கும் சார்” என்றார்.
இதுபோன்று சக தமிழன் பேசும் தமிழ்கூட இந்த ஆங்கிலம் கலந்து, மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரால் ‘உலகின் மூத்த ஞான மொழி’ என்று நிறுவப்பட்ட எனது பெருமைக்குரிய தமிழ் மொழி எப்படி சிதைத்துள்ளது என்று மனம் நொந்துகொண்ட வேளைகளில்.. பொதுவாக, தமிழில் ஆங்கிலம் கலந்து தமிழ் கொலை செய்யப்படுவதையே கண்டுவந்த எனக்கு, ஒரு ஏழை கிராமத்து அரசுப்பள்ளி மாணவியான தேவகி, முதன்முறையாக ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து ஆங்கிலத்தைக் கொலை செய்ததைக் கண்டதால் அந்த மாணவியை பாராட்டினேன்.