சகா – விமர்சனம்
சரண், பிரித்விராஜ், கிஷோர், ஸ்ரீராம் மற்றும் பாண்டி ஆகியோர் குற்றம் செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அங்கு பிரித்விராஜ் – சரண் இடையே மோதல் ஏற்படுகிறது. இதையடுத்து நெருங்கிய நண்பர்களான சரண் – பாண்டியை ஜெயிலில் பிரித்துவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் பாண்டி இறந்துபோக அதற்கு காரணம் பிரித்விராஜ் தான் என்று அவரை பழிவாங்க நினைக்கிறார் சரண்.
ஜெயிலில் தண்டனை அனுபவிக்கும் இவர்கள் அனைவரும் யார்? இவர்களின் முன்கதை என்ன? அவர்கள் செய்த குற்றம் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
சரண், பிரித்விராஜ், கிஷோர், ஸ்ரீராம் மற்றும் பாண்டி அனைவருமே அவர்களது வழக்கமான நடிப்பை ஆர்ப்பாட்டமில்லாமல் கொடுத்திருக்கின்றனர். ஆயிரா குறைவான காட்சிகளில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது வேலையை சிறப்பாக செய்துள்ளார்கள்.
சண்டை போடுவது, பெட் கட்டுவது, தவறாக பேசுவது என, ஒரு சீர்திருத்த பள்ளியில் என்னவெல்லாம் நடக்கக் கூடாதோ அதையெல்லாம் படத்தில் இடம்பெறுகிறது. இதன்மூலம், தவறு செய்பவர்கள் ஜெயிலுக்கு போனாலும் சுதந்திரமாக வாழலாம், கெத்து காட்டலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. சில இடங்களில் தேவையில்லாமல், மாஸ் ஹீரோவுக்களை காட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. மற்றபடி தொழில்நுட்ப குழுவை சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்கள்.
ஷபிர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் திருப்திபடுத்தியிருக்கிறார். நிரண் சந்தரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. ஹரிஹரனின் படத்தொகுப்பும் படத்திற்கு கூடுதல் பலம் தான்.
மொத்தத்தில் `சகா’ சீர்திருத்தம் வேண்டும்.