சதுரம் 2 – விமர்சனம்
“ஆங்கிலத்தில் வெளியான ‘SAW’ என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்து, ரசித்து, அதன் தாக்கத்தில் எடுக்கப்பட்ட படம் இது” என்று டைட்டிலிலேயே சொல்லிவிடுகிறார்கள். “எனக்குத் தெரிந்த உண்மைக்கதை” என்றோ, “நானே ரூம் போட்டு சொந்தமாக யோசித்தேன்” என்றோ பீலா விடாமல், இப்படி நேர்மையாக பிரகடனம் செய்த இப்படக்குழு பாராட்டுக்கு உரியது.
இப்படத்தில் ஒரு சதுரமான அறை. அது மிக அகலமானது. மிக உயரமானது. அங்கே எதிரெதிர் திசையில் தனித்தனியாக ஓர் இளைஞரும், ஒரு நடுத்தர வயதுடையவரும் காலில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறார்கள். இருவருக்கும் நடுவே, ரத்தம் தோய்ந்த நிலையில் ஓர் ஆணின் சடலம் கிடக்கிறது.
இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் நடுத்தர வயதுக்காரர் ஒரு டாக்டர். தொழிலில் நேர்மையானவர். ஆனால் தன் மனைவிக்கு துரோகம் செய்து, இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டவர். அங்கு கட்டப்பட்டிருக்கும் இளைஞனோ, பெரிய கோடீஸ்வரர்களின் அந்தரங்க வாழ்க்கையை ரகசியமாக படம் பிடித்துக் கொடுத்து பணம் சம்பாதிக்கும் போட்டோ கிராபர்.
இந்த இருவருடைய பேண்ட் பாக்கெட்டிலும் அவரவரது பெயர் எழுதப்பட்ட ஆடியோ கேசட் உள்ளது. அதில், அவர்கள் அங்கிருந்து தப்பிப்பதற்கு அந்த அறைக்குள்ளேயே இருக்கும் சில அடையாளக் குறிப்புகளை ஒரு மர்ம ஆண்குரல் சொல்லியிருக்கிறது. அவர்களுக்கு மாலை 6 மணி வரை காலஅவகாசம் என்றும், அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுவார்கள் என்றும் ஆடியோவில் உள்ள மர்மக்குரல் எச்சரிக்கிறது.
விலங்கிடப்பட்டிருக்கும் அந்த இருவரும் அங்கிருந்து தப்பித்தார்களா? அவர்களுக்குள் உள்ள தொடர்பு என்ன? எதற்காக அங்கே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்களை அடைத்து வைத்திருப்பது யார்? ஏன்?” என்ற கேள்விகளுக்கு விடை சொல்லுகிறது மீதிக்கதை.
‘SAW’ ஆங்கிலப்படத்தில் கொலைக்காட்சிகளை கொடூரமாக காட்டியிருப்பார்கள். ஆனால், இந்த ‘சதுரம் 2’ படத்தில், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அளவான, ரொம்பவும் கொடூரமான காட்சிகள் இல்லாமல் திரில்லராக கொடுத்திருக்கிறார், இதன் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.
படக்கதையின் பெரும்பகுதி, ஒரு பூட்டிய சதுர அறைக்குள்ளேயே நடக்கிறது. சில காட்சிகள் மட்டுமே வேறு இடங்களுக்கு விரிகிறது. இருந்தும், போரடிக்காமல் திகிலுடன் படம் விறுவிறுப்புடன் நகர்வது சிறப்பு.
சங்கிலியில் பிணைக்கப்பட்ட டாக்டராக வரும் யோக் ஜேப்பி, போட்டோகிராபராக வரும் ரியாஸ், கர்ப்பிணி பெண்ணாக வரும் சுஜா வருணி, அவரது கணவராக வரும் பிரகதீஷ் கௌசிக் உள்ளிட்ட நடிப்புக்கலைஞர்கள் அனைவரும் தங்கள் பாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையும், சதீஷின் ஒளிப்பதிவும் இயக்குனருக்கு பக்கபலமாக இருந்து உறுதுணை புரிந்திருக்கின்றன.
‘சதுரம் 2’ – க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும்!