சபாபதி – விமர்சனம்
நடிப்பு: சந்தானம், ப்ரீத்தி வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர்
இயக்கம்: ஸ்ரீனிவாசராவ்
இசை: சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு: பாஸ்கர் ஆறுமுகம்
கண்டிப்பான தமிழ் ஆசிரியரின் (எம்.எஸ்.பாஸ்கர்) மகன் சபாபதி (சந்தானம்). சரளமாக பேச இயலாமல் திக்கித் திக்கி பேசும் சுபாவம் கொண்டவன். பணியிலிருந்து ஓய்வுபெற வேண்டிய நிலையில் இருக்கும் சபாபதியின் அப்பா, தன் மகனை ஒரு வேலையில் சேர்த்துவிட படாதபாடு படுகிறார். அவரது முயற்சியால் பல அலுவலகங்களுக்கு இண்டர்வியூவுக்கு செல்லும் சபாபதி, திக்கித் திக்கி பேசும் சுபாவம் காரணமாக வேலைவாய்ப்பு கிடைக்காதது மட்டுமல்ல, நிறைய அவமானங்களையும் சந்திக்கிறான். இதனால் விரக்தி அடையும் சபாபதி, ஆத்திரத்தில் ஒருநாள் குடித்துவிட்டு வந்து வீதியிலும் வீட்டிலும் பயங்கரமாக கலாட்டா செய்கிறான்.
மது மயக்கத்திலிருக்கும் சபாபதியின் வாழ்க்கையில் ‘விதி’ நுழைகிறது. விளைவாக, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் வில்லனின் சூட்கேஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சபாபதியின் கையில் சிக்குகிறது. ’விதி’யின் இந்த விபரீத விளையாட்டு சபாபதியை எப்படியெல்லாம் பாடாய் படுத்துகிறது? முடிவு என்ன? என்பது மீதிக்கதை.
சபாபதியாக வரும் சந்தானம், ஆச்சர்யமூட்டும் விதமாக ஓர் இயக்குநரின் நடிகராக வந்திருக்கிறார். இடைவெளியே விடாத கவுன்ட்டர்கள்தான் அவரின் ஆகச்சிறந்த பலம் எனும்போது, துணிந்து அதைத் தூரவைத்துவிட்டு, திக்குவாய் பிரச்னை கொண்ட மனிதராக வந்திருக்கிறார். அதே சமயம், இந்த அப்பாவி சபாபதி, குடித்த பிறகு அப்பாவை வைத்து அடிக்கும் லூட்டிகள் அதிரடி சிரிப்பு வெடி. குறிப்பிட்டுச் சொல்லும்படி, எமோஷன் காட்சிகளிலும் ஒரு நடிகனாக மெருகேறியிருக்கிறார். இப்படியான ‘அண்டர்பிளே’ ரோல்களை சந்தானம் அவ்வப்போது செய்தால் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்
கண்டிப்பான தமிழ் ஆசிரியராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், சபாபதியின் அப்பாவாகவும் அதே கண்டிப்புடன் அதகளம் செய்திருக்கிறார். சபாபதியின் காதலி சாவித்திரியாக வரும் ப்ரீத்தி வர்மாவுக்கு பெரிய வேலையில்லை, பெரிதாக எதிர்பார்த்த ‘குக் வித் கோமாளி’ புகழுக்கும் வேலையில்லை. டெரர் வில்லனாக மிரட்ட மட்டுமே செய்கிறார் வம்சி. இன்னொரு வில்லனாக ஷாயாஜி ஷிண்டே மட்டும் கொஞ்சம் சீரியஸ் முகம் காட்டுகிறார். உமா பத்மநாபன், லொள்ளு சபா சுவாமிநாதன், மாறன் உள்ளிட்ட பலர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் ஶ்ரீனிவாச ராவ், தான் எடுத்துக்கொண்ட ‘விதி’ எனும் பேன்டஸி முடிச்சுக்கு ஏற்ற பலமானதொரு திரைக்கதையை அமைத்திருக்கிறார். ‘வழக்கமாக’ நகரும் முதல் பாதியின் இறுதியில் காமெடியை அள்ளித் தெளித்து, விட்டதைப் பிடித்திருக்கிறார். கிளைமாக்ஸிலும் ஒரு ஸ்ட்ராங்கான மெசேஜ் சொல்லியிருக்கிறார். எனினும், பகுத்தறிவுக்குப் புறம்பான ‘விதி’ என்னும் மூடநம்பிக்கையை படம் முழுக்க தூக்கிப் பிடித்திருப்பது அபத்தம்.
சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு அருமை.
‘சபாபதி’ – நிறைவான பொழுதுபோக்குப் படம்!