சப்தம் – விமர்சனம்

நடிப்பு: ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா, அபிநயா மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: அறிவழகன்

ஒளிப்பதிவு: அருண் பத்மநாபன்

படத்தொகுப்பு: சாபு ஜோசப் விஜே

இசை: தமன் எஸ்

தயாரிப்பு: ‘7ஜி பிலிம்ஸ்’ 7ஜி சிவா

பத்திரிகை தொடர்பு: சதீஷ் குமார் (எஸ்2 மீடியா)

மூணாரிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். இதற்கு, கல்லூரி வளாகத்துக்குள் பேய் நடமாட்டம் இருப்பது தான் காரணம் என்று பரவலாக பேசப்படுகிறது. இதனால், பிரசித்தி பெற்ற பழமையான அக்கல்லூரியின் பெயர் கெடுவதுடன் மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகிறது. எனவே, கல்லூரி வளாகத்துக்குள் பேய் இருப்பது உண்மையா என்பதை கண்டறிய, அமானுஷ்ய சக்திகளை அவற்றின் சப்தங்களை வைத்து கண்டுபிடித்து, அவற்றுடன் உரையாடும் நிபுணரான ‘பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர்’ ரூபனை (ஆதி) வரவழைக்கிறது கல்லூரி நிர்வாகம்.

ரூபன் தன்னிடமுள்ள அதிநவீன சிறப்பு கருவிகள் மூலமாக மொத்த கல்லூரியையும் அலசி ஆராய்கிறார். அந்த ஆய்வில், பல ஆவிகளின் குரல்களை தனது அதிநவீன சிறப்பு கருவிகள் வழியாக கேட்கிறார் ரூபன். சில அதிர்ச்சிகரமான தகவல்களும் கிடைக்கின்றன.

இந்நிலையில், அதே கல்லூரியில் இளநிலை விரிவுரையாளராக இருக்கும் அவந்திகா (லட்சுமி மேனன்) மீது ரூபனின் சந்தேகப் பார்வை திரும்புகிறது. அவந்திகாவைப் பின்தொடரும் ரூபனின் அமானுஷ்ய விசாரணைப் பயணத்திற்கிடையில் மர்மங்களும் கொலைகளும் நிகழ, ஒரு கட்டத்தில் அவந்திகாவையே அமானுஷ்ய சக்திகள் பயமுறுத்துவதைக் கண்டறிகிறார் ரூபன். ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்தும்போது, அங்கு 42 குழந்தைகளின் ஆவிகள் இருப்பது தெரிய வருகிறது.

ஆவிகளாக இருக்கும் அந்த 42 குழந்தைகள் யார்? அவர்களுக்கும் அக்கல்லூரிக்கும், அவர்களுக்கும் மாணவர்களின் மர்ம மரணத்துக்கும் என்ன தொடர்பு? இவற்றை ரூபன் எப்படி கண்டுபிடிக்கிறார்? இறுதியில் ஆவிகளின் பிடியிலிருந்து அக்கல்லூரி விடுபட்டதா? என்பன போன்ற கேள்விகளுக்கு ரத்தத்தை உறைய வைக்கும் பயங்கர சப்தங்கள் வழியே விடை அளிக்கிறது ‘சப்தம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் ரூபனாக ஆதி நடித்திருக்கிறார். உயிரைக் கொடுத்து நடிக்கத் தேவையில்லாத தனது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

நாயகியாக, இளநிலை விரிவுரையாளர் அவந்திகாவாக லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். மர்மமாகத் தோன்றும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட தன் கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து, நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தரத்தில் மிதந்து நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருப்பது அருமை.

படத்தின் இரண்டாம் பாதியில் டயானா என்ற கதாபாத்திரத்தில் சிம்ரன் வருகிறார். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்காக புதிய இசையைக் கண்டுபிடிப்பது என்பது போன்ற மெல்லிய உணர்வுகளால் தனது கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

நான்சி டேனியல் என்ற கதாபாத்திரத்தில் லைலா நடித்திருக்கிறார். அவர் இதுவரை ஏற்று நடிக்காத வேடம் இது. இதில் தனித்துவமான உடல்மொழியால் அலப்பரை செய்திருக்கிறார் லைலா.

படம் முழுக்க நாயகனுடன் வரும் ஆரோக்கியம் என்ற கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்திருக்கிறார். ரொம்ப சீரியஸாக செல்லும் கதையில் ஆங்காங்கே நகைச்சுவையைத் தூவி ரிலாக்ஸ் ஆக உதவியுள்ளார்.

ஆண்டனியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், டேனியலாக வரும் ராஜீவ் மேனன், தீபக்காக வரும் விவேக் பிரசன்னா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிவழகன். ‘ஈரம்’ படத்தில் ஆவியை தண்ணீர் வடிவில் காட்டி ரத்தத்தை உறைய வைத்த இவர், இதில் பயங்கர சப்தங்கள் மூலம் ஆவிகளின் இருப்பையும், இயக்கத்தையும் காட்டி பார்வையாளர்களை அச்சுறுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். அமானுஷ்யங்கள் பழிவாங்கும் கதையை முற்றிலும் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லி திகில் பட விரும்பிகளுக்கு தனித்துவமான புது அனுபவத்தைக் கொடுத்துள்ளார்.

அமானுஷ்யமும் திகிலும் நிறைந்த திரைக்கதைக்குத் தேவையான மிரட்டலான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறது அருண் பத்மநாபனின் கேமரா.

பதற்றத்தின் வீரியம் குறையாமல் காட்சிகளை நுணுக்கமாகக் கோர்த்திருக்கிறது வி.ஜே. சாபு ஜோஸப்பின் படத்தொகுப்பு.

தமன் இசையில் ‘மாயா மாயா’ பாடல் மர்மத்தைக் கூட்ட உதவியிருக்கிறது. அவரே தன் பின்னணி இசையால், பல இடங்களில் பயத்தையும், பதைபதைப்பையும் கொளுத்திப் போட்டிருக்கிறார்.

எல்லா பிரேமிலும் கலை இயக்குநர் மனோஜ் குமாரின் வேலைப்பாட்டை உணர முடிகிறது.

ஆடியோகிராபர் டி. உதய்குமார் மற்றும் சின்க் சினிமாவின் நேர்த்தியான ஒலியமைப்பு படத்திற்கு மகுடமாக மாறியிருக்கிறது.

‘சப்தம்’ – திகில் ரசிகர்களுக்கு செம விருந்து!

ரேட்டிங்: 2.5/5