சபரி – விமர்சனம்
நடிப்பு: வரலட்சுமி சரத்குமார், மைம் கோபி, கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், பேபி நிவேக்ஷா மற்றும் பலர்
இயக்கம்: அனில் கட்ஸ்
ஒளிப்பதிவு: ராகுல் ஸ்ரீவத்சவ் & நானி சமிடிஷெட்டி
படத்தொகுப்பு: தர்மேந்திரா கக்கராலா
இசை: கோபி சுந்தர்
தயாரிப்பு: மகேந்திரநாத் கொண்ட்லா
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா (டிஒன்)
சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில், நாயகியை கதையின் முதன்மை கதாபாத்திரமாக வைத்து, தெலுங்கு மொழியில் எடுத்து, பின்னர் தமிழில் மொழிமாற்றம் (டப்பிங்) செய்யப்பட்ட திரைப்படம் இது.
சிறு வயதிலேயே தாயை இழந்துவிட்டதால், தாய் பாசத்திற்காக ஏங்கித் தவிப்பவர் நாயகி சஞ்சனா (வரலட்சுமி சரத்குமார்). அவர் கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் உயர்பதவியில் இருக்கும் அரவிந்தை (கணேஷ் வெங்கட்ராம்) காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். மும்பையில் குடும்பம் நடத்தும் இவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. ஆண்டுகள் உருண்டோட, பணம், புகழ், செல்வாக்குக்கு ஆசைப்பட்டு, அரவிந்த் தனது கம்பெனியின் உரிமையாளருடைய மகளுடன் கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்கிறார். இது சஞ்சனாவுக்குத் தெரிய வர, கணவரும் மனைவியும் பிரிகிறார்கள்.
கணவரை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு, தனது ஐந்து வயது பெண் குழந்தையுடன் (பேபி நிவேக்ஷா) மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு வருகிறார் சஞ்சனா. தனது மகள் தான் உலகம் என்று வாழ்கிறார். அதே சமயம், அவரிடம் இருந்து குழந்தையைப் பிரிக்க அவரது முன்னாள் கணவர் கணேஷ் அரவிந்த் முயற்சிக்கிறார். சஞ்சனாவுடன் இருக்கும் குழந்தை அவருடைய குழந்தை இல்லை என்றும், அவருடைய குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டது என்றும், அதற்கு பதிலாக மருத்துவமனையில் மாற்றி வைக்கப்பட்ட குழந்தை தான் இது என்றும் தெரிய வர, சஞ்சனா அதிர்ச்சி அடைகிறார்.
இந்நிலையில், கொலைக் குற்றவாளியான சூர்யா (மைம் கோபி), சஞ்சனாவிடம் உள்ள பெண் குழந்தை தன்னுடைய மகள் என்று சொந்தம் கொண்டாடுவதோடு, அந்த குழந்தையைக் கடத்தி வைத்துக்கொண்டு, ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால் தான் குழந்தையைக் கொடுப்பேன் என்று சஞ்சனாவிடம் கத்திமுனையில் பேரம் பேசுகிறார்..
குழந்தையை சொந்தம் கொண்டாடும் சூர்யா, அதே குழந்தையை கடத்தி வைத்துக்கொண்டு பணம் கேட்பது ஏன்? குழந்தையை மீட்கப் போராடும் சஞ்சனா எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன? அதில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘சபரி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகி சஞ்சனாவாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். படம் முழுவதும் அவர் மீதே பயணப்படுவதால், மொத்தப் படத்தையும் ஒற்றை ஆளாக அவர் தாங்கியிருக்கிறார். சிறுவயதிலேயே இழந்துவிட்ட தனது தாயை நினைத்து ஏங்கும் இடம், குழந்தையைப் பிரிந்து தவிக்கும் இடம், குழந்தையை மீட்க அதிரடி ஆக்ஷனில் இறங்கும் இடம் என பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாயகியின் கணவராக, கார்ப்பரேட் கம்பெனியில் உயர்பதவி வகிப்பவராக, அரவிந்த் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கணேஷ் வெங்கட்ராம். பணக்காரத்தனமான நடை, உடை, பாவனையுடன், ரிச் லுக்கில் மிரட்டியிருக்கிறார்.
குழந்தையைக் கடத்தும் சூர்யாவாக மைம் கோபி நடித்திருக்கிறார். தனது கூர்மையான கண் பார்வையாலேயே மிரள வைத்து, அச்சுறுத்தும் நடிப்பைக் கொடுத்து, அசத்தியிருக்கிறார்.
விவாகரத்து செய்த நாயகிக்கு தேவையறிந்து உதவும் நல்ல நண்பராக, வழக்கறிஞர் ராகுலாக நடித்திருக்கிறார் ஷஷாங்க். நாயகியின் மகளாக பேபி நிவேக்ஷா நடித்திருக்கிறார். இருவருமே குறையின்றி நிறைவாக நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
தன் மகள் தான் உலகம் என்று வாழும் நாயகியின் பாசப் போராட்டத்தை, சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் சொல்லியிருக்கும் இயக்குநர் அனில் கட்ஸ், ஆரம்பக் காட்சியிலேயே பார்வையாளர்களை கதைக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறார். அடுத்தடுத்து வரும் சுவாரஸ்யமான காட்சிகளால் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு விடுகிறார். ஆபத்தில் இருந்து தன் குழந்தையை காப்பாற்ற போராடும் ஒரு தாயின் போராட்டத்தை யதார்த்தமாகவும், அதிரடியாகவும் அவர் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.
ராகுல் ஸ்ரீவத்சவ் மற்றும் நானி சமிடிஷெட்டியின் ஒளிப்பதிவும், கோபி சுந்தரின் இசையும் கதைக்கேற்ப பயணித்துள்ளன.
‘சபரி’ – ஒருமுறை பார்க்கலாம்!