சபா நாயகன் – விமர்சனம்

நடிப்பு: அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ், அருண், ஜெய்சீலன், ஸ்ரீராம், விவ்யாசந்த், ஷெர்லின் சேத், அனீஷ், மைக்கேல் தங்கதுரை, உடுமலைப்பேட்டை ரவி, அக்‌ஷயா ஹரிஹரன், பிக்பாஸ் பாலா, ராஸ், மனோகர், துளசி, பாலமுருகன், ஷ்ரவந்தி, ரேஷ்மி நம்பியார், பாஸ்கரன் மற்றும் பலர்

இயக்கம்: சி.எஸ்.கார்த்திகேயன்

இசை: லியோன் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ்

படத்தொகுப்பு: கணேஷ் சிவா

தயாரிப்பு: கிளியர் வாட்டர் பிலிம்ஸ், ஐ சினிமா, கேப்டன் மேகவாணன் இசைவாணன்

பத்திரிகை தொடர்பு: சதீஷ்குமார்

புதுமையான, ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து, அப்படங்களை வெற்றிப் படங்களாகவோ, கவனத்தை ஈர்க்கும் படங்களாகவோ ஆக்குவதற்கு பெரிதும் துணையாக இருப்பவர் அசோக் செல்வன். அவர் நடித்துள்ள படம் என்பதால் ‘சபா நாயகன்’ படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்…

0a1m

ஓரிரவு போதையில் வரும் நாயகன் சபாவுக்கும் (அசோக் செல்வன்), ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் இன்ஸ்பெக்டர் விஷ்ணு (மைக்கேல் தங்கதுரை),  கான்ஸ்டபிள் (மயில்சாமி) உள்ளிட்ட போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. கடுப்பாகும் இன்ஸ்பெக்டர் விஷ்ணு, சபாவை கைது செய்து, தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போலீஸ் நிலையம் அழைத்துச் செல்கிறார். போகும் வழியில் மது புட்டிகள் வாங்கிவரும் இளைஞர் ஒருவரையும் பிடித்து அதே ஜீப்பில் ஏற்றிக்கொண்டு செல்கிறார். அந்த இளைஞர் தனக்கு காதல் தோல்வி என்றும், அதனால் வேதனையை மறப்பதற்காக குடிப்பதற்கு மது வாங்கிச் செல்வதாகவும் கூற, உள்ளம் உருகும் இன்ஸ்பெக்டர் விஷ்ணு, அந்த இளைஞரை ஜீப்பிலிருந்து இறக்கி அனுப்பி விடுகிறார். இதை கவனிக்கும் சபா, ரோந்துப் படையின் அனுதாபத்தைப் பெறும் நோக்கில், “என் காதல் தோல்விக் கதைகள் எப்படிப்பட்டவை, தெரியுமா?” என்று தன் பள்ளிக் காலத்திலும், கல்லூரிக் காலத்திலும் நிகழ்ந்த காதல் தோல்விகளை ஃபிளாஷ்பேக்கில் சொல்ல ஆரம்பிக்கிறார்…

… மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சபா, சக மாணவி இஷாவை (கார்த்திகா முரளிதரன்) ஒருதலையாகக் காதலிக்கிறார். ஆனால், தன் காதலை இஷாவிடம் சொல்வதற்கு முன்பாகவே அவரது பள்ளிப்படிப்பு முடிந்துவிடுவதால், அந்த காதல் தோல்வியடைகிறது. அதன்பின் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும்போது ரியாவை (சாந்தினி) காதலிக்கிறார். ரியாவுடனான காதல் ஆரம்பத்தில் அமர்க்களமாக இருந்தாலும், அதன்பிறகு அதுவும் தோல்வியடைகிறது…

சபா சொல்லும் இந்த காதல் தோல்விக் கதைகள் இன்ஸ்பெக்டர் விஷ்ணுவின் இதயத்தைத் தொடுகின்றன; மயில்சாமி உள்ளிட்ட இரண்டு கான்ஸ்டபிள்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன…

இறுதியாக, பட்ட மேற்படிப்பு படிக்கும்போது மேகாவை (மேகா ஆகாஷ்) காதலித்த கதையைச் சொல்லுகிறார் சபா. மேகா – சபா காதலாவது வெற்றி பெற்றதா? அல்லது வழக்கம் போல அதுவும் தோல்வியில் முடிந்ததா? இந்த கதைகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் விஷ்ணு திடீர் திருப்பமாக எடுத்த முடிவு என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு ஜாலியாக விடை அளிக்கிறது ‘சபா நாயகன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

சபா என்ற நாயக கதாபாத்திரத்தின் வயது வளர்ச்சிக்கு ஏற்ப, மேல்நிலைப் பள்ளி மாணவராக, பட்டப்படிப்பு மாணவராக, பட்ட மேற்படிப்பு மாணவராக வெவ்வேறு தோற்ற மாறுபாடுகளுடன் வந்து வசீகர காதலனாய் அருமையாக நடித்திருக்கிறார் அசோக் செல்வன்.

நடனம், நகைச்சுவை ஆகியவற்றிலும் அசத்தியிருக்கிறார். தனது காதல் தோல்விக் கதைகளை கூட சோகமாக அல்லாமல் நகைச்சுவையாக சொல்லி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு காதல் கதையிலும் ஒவ்வொரு விதத்தில் நடித்து தனது நவசர நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேல்நிலைப் பள்ளியில் நாயகனால் காதலிக்கப்படும் இஷாவாக வரும் கார்த்திகா முரளிதரன், பட்டப்படிப்பில் காதலிக்கப்படும் ரியாவாக வரும் சாந்தினி, பட்ட மேற்படிப்பில் காதலிக்கப்படும் மேகாவாக மேகா ஆகாஷ் என மூன்று நாயகிகள், மூன்று பேரும் அழகிலும், நடிப்பிலும் வசீகரித்திருக்கிறார்கள்.

நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் அருண், ஜெயசீலன், ஸ்ரீராம், அனீஷ், இன்ஸ்பெக்டர் விஷ்ணுவாக நடித்திருக்கும் மைக்கேல் தங்கதுரை, கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் மயில்சாமி, நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் பெண் உல்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்கு தேவையான, அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் சி.எஸ்.கார்த்திகேயன், இக்கால ரசிகர்களின் மனநிலை தெரிந்து, அதற்கேற்ப படத்தை கொடுத்திருக்கிறார். காதல் தோல்வியை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, அடுத்த கட்டத்திற்கு பயணிக்க வேண்டும் என்ற கருத்தை ஜாலியாக சொல்லியிருப்பவர், இளைஞர்கள் கொண்டாடும் விதத்தில் காட்சிகள் மற்றும் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகியோரின் ஒளிப்பதிவு மூன்று காலகட்டங்களையும் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பதோடு, காட்சிகளை வண்ணமயமாகவும் படமாக்கியிருக்கிறது.

லியோன் ஜேம்ஸின் இசையில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட ரகமாக இருந்தாலும், திரும்ப திரும்ப கேட்கும்படியும், இளசுகளை கவரும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 ‘சபா நாயகன்’ – இளைஞர்களின் மனங்களைக் கொள்ளை கொள்வான்!