சான்றிதழ் – விமர்சனம்

நடிப்பு: ஹரிகுமார், ரோஷன் பஷீர், ராதாரவி, அபுகான், ரவிமரியா, மனோபாலா, அருள்தாஸ், கௌசல்யா, ஆஷிகா அசோகன், தனிஷா குப்பண்டா, ஆதித்யா கதிர், காஜல் பசுபதி , உமாஸ்ரீ மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஜெயசந்திரன் (JVR)

ஒளிப்பதிவு: எஸ்.எஸ்.ரவிமாறன் சிவன்

படத்தொகுப்பு: ஜே.எஃப்.காஸ்ட்ரோ

இசை: பைஜு ஜேக்கப்

தயாரிப்பு: ‘வெற்றிவேல் சினிமாஸ்’ எஸ்ஜேஎஸ். சுந்தரம் & JVR

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

ஐரோப்பாவில், மத்திய காலத்தில், ‘உட்டோப்பியா’ (UTOPIA) என்றொரு இலக்கிய வகை உருவானது. யதார்த்தத்தில் எங்கும் இல்லாத அற்புதமான சமூக விதிகளை, நல்லொழுக்க நெறிகளை பின்பற்றும் மக்கள் வாழும் ஒரு தீவை அல்லது கிராமத்தை அல்லது நகரத்தை அல்லது கிரகத்தை, உச்சபட்சக் கற்பனையில் ஓர் எழுத்தாளன் படைப்பதை ‘உட்டோப்பியா’ என விமர்சகர்கள் வகைப்படுத்தினார்கள். உதாரணமாக, “அங்கு ஏழை – பணக்காரன் என்ற பேதம் இல்லை” என்றோ, “ஆளுபவர்கள் – ஆளப்படுபவர்கள் என்ற வேறுபாடு இல்லை” என்றோ, “திருட்டு, விபசாரம், கொலை போன்ற குற்றச்செயல்கள் இல்லவே இல்லை” என்றோ படைப்பாளன் – தான் விரும்புவதை, இருப்பது போல் – படைப்பது தான் ‘உட்டோப்பியா’. இந்த வகையைச் சேர்ந்த கருத்தாழம் மிக்க திரைப்படமாக தற்போது வெளிவந்திருக்கிறது ‘சான்றிதழ்’.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமம். அந்த கிராமத்தின் பெயர் கருவறை. இக்கிராம மக்கள் தங்களுக்கென்று தனி சட்டதிட்டங்களை வகுத்துக்கொண்டு, ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் ஊர் மெச்ச, உலகம் போற்ற வாழ்ந்து வருகிறார்கள். பிற கிராமங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் இந்த கருவறை கிராமத்துக்கு ஒன்றிய அரசு ‘சிறந்த கிராமத்துக்கான விருது’ அறிவிக்கிறது. இந்த விருதை கிராம மக்கள் வாங்க மறுக்கிறார்கள். இதனால் கோபமடையும் அமைச்சர் கண்ட்ரோல் கந்தசாமி (ராதாரவி) கருவறை கிராமத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

அமைச்சரின் சதி முயற்சிகளும், விருதினை கிராம மக்கள் வாங்க மறுப்பதற்கான காரணமும் ஒரு பக்கம் இருக்க, முன்னொரு காலத்தில் சாதாரண ’தறுதலை’ கிராமமாக இருந்த அந்த ஊர், இப்போது சிறந்த ’கருவறை’ கிராமமாக மாறியது எப்படி? அப்படி மாறக் காரணமான வெள்ளைச்சாமி (ஹரிகுமார்) என்பவரின் தியாகக் கதை என்ன? என்பவற்றைச் சொல்வது தான் ‘சான்றிதழ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1d

வெள்ளை வேட்டி – வெள்ளைச் சட்டையில், கம்பீரமாக வெள்ளைச்சாமியாக வலம் வரும் ஹரிகுமார், ஒரு கிராமத்தையே முற்றிலும் மாற்றக்கூடிய ஆளுமை உள்ளவர் தான் என்று நம்பும்படியாக சிறப்பாக நடித்திருக்கிறார். தனது கிராம மக்களின் அவல நிலையைக் கண்டு கலங்கும் காட்சிகளில் தன்னலமற்ற தலைவர்களின் ஈரமனசை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.

கருவறை கிராமத்து இளைஞர் பிச்சையாக வரும் ரோஷன் பஷீர், பத்திரிகையாளர் சௌமியாவாக வரும் ஆஷிகா அசோகன் ஆகியோரது காதல் காட்சிகள் இளசுகளின் இதயத்தில் குளுமை சேர்க்கும்.

அமைச்சர் கண்ட்ரோல் கந்தசாமியாக வரும் ராதாரவி, வீராவாக வரும் அருள்தாஸ், சங்கீதாவாக வரும் கெளசல்யா, மண்ணுமுட்டியாக வரும் ரவிமரியா,  அல்லியாக வரும் தனிஷா குப்பண்டா, ஆரவல்லியாக வரும் காஜல் பசுபதி, சூரவல்லியாக வரும் உமாஸ்ரீ உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

பொல்லாதவன் என்ற கதாபாத்திரத்தில் வரும் மனோபாலாவும், மீன் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஆதித்யா கதிரும் அவ்வப்போது நகைச்சுவையை அள்ளித் தெளித்து சிரிக்க வைக்கிறார்கள்.

கருவறை என்ற உயர்வான கிராமத்தையும், அதில் வசிக்கும் உன்னதமான மனிதர்களையும் திரையில் உருவாக்கியிருக்கும் இயக்குனர் ஜெயச்சந்திரன் (JVR), நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமமும் ஒழுக்கத்திலும், ஒற்றுமையிலும் இந்த அளவு சிறந்து விளங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை – உட்டோப்பியன் சிந்தனையை – இதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். நிஜ வாழ்க்கையில் இந்த அளவு கட்டுப்பாடுகளும், சட்டத்திட்டங்களும் நடைமுறை சாத்தியம் இல்லை என்ற போதிலும், இப்படியெல்லாம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தை பார்வையாளர்களிடம் ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர்.

’தனித்துவமான கிராமம்’ என்பதைக் காட்ட ஒளிப்பதிவாளர் எஸ்.எஸ்.ரவிமாறன் சிவன் நிறைய உழைப்பைப் போட்டுள்ளார். பிஜு ஜேக்கப்பின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

‘சான்றிதழ்’ – சமூகத்துக்கு அவசியமான, தரமான திரைப்படம்!