சாலா – விமர்சனம்
நடிப்பு: தீரன், ரேஷ்மா வெங்கடேஷ், சார்லஸ் வினோத், ஸ்ரீநாத், அருள்தாஸ், சம்பத் ராம் மற்றும் பலர்
இயக்கம்: எஸ்.டி.மணிபால்
ஒளிப்பதிவு: ரவீந்திரநாத் குரு
படத்தொகுப்பு: புவன்
இசை: தீசன்
பேனர்: பீப்பிள் மீடியா ஃபேக்டரி
தயாரிப்பு: டி.ஜி. விஸ்வபிரசாத்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
மது அருந்தி உற்சாகமாக ஆடிப்பாடும் காட்சிகளைத் திணித்து, அதன்மூலம் குடிப்பழக்கத்தை மறைமுகமாக ஆதரிக்கும் திரைப்படங்கள் தமிழில் வருவது சர்வசாதாரணம். ஆனால், குடிப்பழக்கத்துக்கு எதிரான திரைப்படங்கள் வருவது அபூர்வம். அதிலும், மதுபானத் தொழில் செய்துகொண்டிருக்கும் ஒருவரே குடிப்பழக்கத்துக்கு எதிராக மாறுவதாகக் காட்டும் திரைப்படம் வருவது அபூர்வத்திலும் அபூர்வம். அத்தகைய அபூர்வத்திலும் அபூர்வமான திரைப்படம் தான் ‘சாலா’.
வடசென்னையிலுள்ள ராயபுரத்தில் பலம் பொருந்திய – எதிரும் புதிருமான – இரண்டு தாதாக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அருள்தாஸ் (கதையில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் குணா); மற்றொருவர் சத்யா.
தாதா அருள்தாஸ் ஏலம் எடுத்த ‘பார்வதி ஒயின்ஸ்’ மிகவும் பாப்புலர் என்பதால், அதை ஏலத்தில் எடுப்பது தான் பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. அது தொடர்பான போட்டி மற்றும் கோஷ்டி மோதலில், அருள்தாஸுக்கு எதிரான தாதா சத்யா கொல்லப்பட, அருள்தாஸின் உயிர் ஒரு சிறுவனால் காப்பாற்றப்பட, ‘பார்வதி ஒயின்ஸ்’ சீல் வைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுகிறது.
அருள்தாஸின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனை அவர் தன் மகனாகப் பாவித்து வளர்க்கிறார். அந்த சிறுவனே வளர்ந்து இளைஞனாகி, தற்காலத்தில் நாயகன் தீரன் (கதையில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் சாலா) ஆக இருக்கிறார்.
அருள்தாஸுக்கு எதிரான சத்யா கோஷ்டியில், தீரனைப் போல சமவயது இளைஞரான சார்லஸ் வினோத் (கதையில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் தங்கதுரை) இப்போது தாதாவாக இருக்கிறார். சத்யாவின் உறவினரான இவர் அரசியலிலும் ஏற்றம் பெற்று செல்வாக்குடன் திகழ்கிறார். தாதா சத்யாவின் கொலைக்குப் பழிக்குப் பழியாக தாதா அருள்தாஸைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்பது இவரது திட்டம். ஆனாலும், அதை நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்கு ஒரே காரணம், அருள்தாஸ் அருகில் பக்கபலமாக தீரன் இருப்பது தான்.
இதற்கிடையே, ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து படிக்க வைக்கும் பள்ளி ஆசிரியையும், சமூக ஆர்வலருமான நாயகி ரேஷ்மா வெங்கடேஷ் (கதையில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் புனிதா), மதுவின் தீமைகளுக்கு எதிராக தொடர் பிரசாரம் மேற்கொள்வதோடு, பள்ளிகள், கோயில்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூடுமாறு மாணவர்களோடு சேர்ந்து தீவிரமாகக் குரல் கொடுத்துப் போராடுகிறார். தீரன் நடத்தும் மதுக்கடைக்கு முன்பாகவும் இதுபோல் ரேஷ்மா வெங்கடேஷ் போராட்டம் நடத்த, ஆரம்பத்தில் ஆத்திரப்பட்டு காண்டாகி மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் தீரன், பின்னர் ரேஷ்மா வெங்கடேஷின் சமூக அக்கறையைக் கண்டு வியந்து, அவரைக் காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் ‘பார்வதி ஒயின்ஸ்’ மீண்டும் ஏலத்துக்கு வர, அதை ஏலம் எடுப்பதே தங்களுக்குப் பெருமை என நினைக்கும் நாயகன் தீரன் கோஷ்டி, வில்லன் சார்லஸ் வினோத் கோஷ்டி ஆகிய இரு தரப்பும் களத்தில் குதிக்கிறது. ஏலத்தில் வெற்றி பெற்றது யார்? நாயகி ரேஷ்மா வெங்கடேஷின் மதுக்கடைகளை மூடும் போராட்டம் என்ன ஆனது? நாயகன் தீரன் – நாயகி ரேஷ்மா வெங்கடேஷ் காதல் கல்யாணத்தில் முடிந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘சாலா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் சாலா கதாபாத்திரத்தில் தீரன் நடித்திருக்கிறார். நீண்ட தலைமுடி, நீண்ட தாடி, ஆறடி உயரம், கட்டுமஸ்தான கம்பீரமான தோற்றம் என மிரட்டல் நாயகனாக திரையில் ஜொலிக்கிறார். அறிமுகக் காட்சியிலேயே இரண்டு பிளேட் பிரியாணியை ஒரே நேரத்தில் சாப்பிடுவதன் மூலம், சண்டைக்கு எத்தனை ரவுடிகள் வந்தாலும் அத்தனை பேரையும் அடித்தாடும் உடல்பலம் பொருந்தியவர் என காட்டப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் ரவுடிகளைப் பறக்கவிட்டு அப்ளாஸ்களை அள்ளுகிறார். நடனம் கூட அருமையாக ஆடுகிறார். கொஞ்சம் நடிப்புப் பயிற்சி மட்டும் எடுத்துக்கொண்டால், வித்தியாசமான கதாபாத்திரங்களையும் சிறப்பாகச் செய்யலாம்.
நாயகியாக, பள்ளி ஆசிரியை மற்றும் சமூக ஆர்வலராக புனிதா கதாபாத்திரத்தில் ரேஷ்மா வெங்கடேஷ் நடித்திருக்கிறார். பார்க்க அழகாக இருக்கிறார். கள்ளமில்லா உள்ளம் கொண்ட பொறுப்புள்ள ஆசிரியராகவும், மதுவுக்கும் மதுபானக் கடைகளுக்கும் எதிராகப் போராடும் துணிச்சல்காரராகவும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் நண்பன் தாஸாக வரும் ஸ்ரீநாத் காமெடியில் கலக்கியிருக்கிறார். தாதா குணாவாக வரும் அருள்தாஸ், வில்லன் தங்கதுரையாக வரும் சார்லஸ் வினோத், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சம்பத் ராம், மாணவனாக வரும் திடியன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தில் வரும் வசனங்கள் ஒவ்வொன்றும் குத்தீட்டி போல் கூர்மையாக எழுதப்பட்டுள்ளன. உதாரணமாக, அரசே மது விற்பனை செய்வதை நாயகி கதாபாத்திரம் வழியாகக் கேள்வி கேட்டிருக்கும் விதம் அபாரம். ‘நல்ல சாராயத்துக்கு எதிரா போராடுகிறதை விட கள்ளச் சாராயத்துக்கு எதிரா போராடலாம்ல?’ என்று நாயகன் கேட்கும்போது, அதற்கு நாயகி சொல்லும் பதில் பிரமாதம்.
அறிமுக இயக்குநர் எஸ்.டி.மணிபால் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மதுபான விற்பனையின் பின்னால் இருக்கும் அதிகார அரசியல், குற்றவுலகம் ஆகியவற்றின் வலைப்பின்னல் தொடர்பைத் துணிச்சலாக எடுத்துக் காட்டியிருக்கிறார். மதுவால் குடும்பங்கள் எப்படி அழிகின்றன என்பதை வெறும் புள்ளி விவரங்களை அடுக்கிப் போரடிக்காமல், கதாபாத்திரங்களின் வாழ்க்கை வழியாகவும், புரட்டிப் போடும் கிளைமாக்ஸ் காட்சி வழியாகவும் பொட்டில் அறைந்தது போல் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். சமூக அக்கறை மற்றும் பொறுப்புணர்வுடன் சீர்திருத்தக் கருத்துகளை உள்ளடக்கி, தொய்வில்லாமல், விறுவிறுப்பாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் மணிபால். பாராட்டுகள்.
தீசன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓ.கே ரகம். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை.
கிளைமாக்ஸ் காட்சியில் லாரியில் அடிபட்டு இறந்துகிடக்கும் குழந்தைகளைத் தத்ரூபமாக காட்டி, நெஞ்சம் பதற வைக்கும் வைரபாலனின் கலை இயக்கம் போற்றுதலுக்கு உரியது.
‘சாலா’ – குடிப்பழக்கம் உள்ளவர்கள் மட்டுமல்ல, குடிப்பழக்கம் இல்லாதவர்களும் அவசியம் பார்த்து ஆதரிக்க வேண்டிய அருமையான படம்!