அவதூறு பரப்பியதாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது; சிறையில் அடைப்பு!

மதுரை தொகுதி எம்.பி. சு. வெங்கடேசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக, பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, கடந்த 7-ம் தேதி தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 12-ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மதுரை மாநகர சைபர் க்ரைம் போலீஸார் நேற்று நள்ளிரவு, சென்னை தி.நகரில் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த பாஜகவினர், சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வெளியே நள்ளிரவில் கூடி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்.ஜி.சூர்யா கைது குறித்து முறையான தகவல் தெரிவிக்கவில்லை எனவும், பாஜகவை பழிவாங்கும் நோக்கில் திமுக அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பாஜகவினர் சாலை மறியலை கைவிட்டனர்.

சென்னையில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை போலீஸார் இன்று காலை மதுரைக்கு அழைத்து வந்தனர். நீதிமன்றம் விடுமுறை என்பதால் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் வீட்டில் சூர்யாவை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

நீதிபதியின் வீட்டுக்கு சூர்யா அழைத்து வரப்பட்டபோது, அந்த சாலையில் பாஜகவினர் திரண்டனர். போலீஸாரை கண்டித்து சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்பு மாலையில் மேல அனுப்பானடியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

# # #

 நடந்தது என்ன:

பெண்ணாடம் பேரூராட்சி என்பது மதுரையில் அல்ல; கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு, சுய உதவி குழு மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்த துப்புரவு பணியாளர் பாபு என்பவர், மே19-ம் தேதி சாக்கடையில் இறங்கி வேலை செய்தபோது, உடலில் அரிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மே 24-ம் தேதி இறந்தார்.

எஸ்.ஜி.சூர்யா வெளியிட்ட பதிவு: 

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, மதுரை எம்.பி. சு.வெங்கடேசனைக் குறிப்பிட்டு தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவு வருமாறு:

 கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் பறிபோன தூய்மை பணியாளர் உயிர், கள்ள மெளனம் காக்கும் புரட்சி போராளி மதுரை எம்.பி சு.வெங்கடேசன்!

புரட்சி போராளி, விளம்பர அரசியல் பிரியர், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு வணக்கம்.

பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் விசுவநாதன், தூய்மை பணியாளர் ஒருவரை, மலம் கலந்த நீரில் இறங்கி கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதன் காரணமாக உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று, பின்னர் சிகிச்சை பலனின்றி தூய்மை பணியாளர் ஒருவர் இறந்துள்ளார். சட்டப்படி குற்றம் என தெரிந்தும் அந்த பாவப்பட்ட தூய்மை பணியாளரை அந்த கழிவு நீர் கால்வாயில் இறங்கி வேலை செய்ய சொன்னது உங்கள் சக தோழர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் விசுவநாதன் தான்.

இறந்தவர் பட்டியலின சகோதரர், எங்கே உங்கள் செங்கொடி? எங்கே உங்கள் போராட்ட குணம்? எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்? ஆளும் பாஜக அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக்கொண்டு வருவீர்கள். இப்போது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா? அல்லது பம்மி விட்டீர்களா? ஏன் உங்களது செங்கொடி சக தோழர்களுக்கு எதிராக ஏறாதா? அல்லது உங்கள் செங்கொடி பட்டியலின சமுதாய சகோதரர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி போராடாதா?

பிரிவினைவாதம் பேசி சிவப்பு கொடியை போர்த்திக் கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

# # #

அமைச்சர்எம்.பி. ட்விட்டர் மோதல்: 

எஸ்.ஜி.சூர்யாவின் ட்விட்டர் பதிவு மற்றும் அவரது கைது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சு.வெங்கடேசன் எம்.பி. ஆகிய இருவரும் ட்விட்டரில் காரசாரமான கருத்து மோதலில் ஈடுபட்டனர். அதன் விவரம்:

நிர்மலா சீதாராமன்: ”மலக்குழி மரணங்களின் மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அதைப்பற்றி கேள்வி எழுப்பிய எஸ்.ஜி. சூர்யாவை தண்டிக்க முயற்ச்சி எடுப்பது நியாயமா? திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு, அதுவும் முக்கியமான சமூகப் பிரச்சினையில், வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பாஜக தொண்டர்கள் சட்ட ரீதியாக போராடுவோம்.”

சு.வெங்கடேசன்: ”பொய்யையும், பீதியையும் பரப்புவதா மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரின் வேலை? மதுரை மாவட்டத்தில் பெண்ணாடம் என்ற பேரூராட்சி இருக்கிறதா என பார்த்துவிட்டுகூட கருத்துச்சொல்ல முடியாதா? வதந்தி உங்களின் ஆயுதம். உண்மை எங்களின் கவசம்.”

நிர்மலா சீதாராமன்: ”எஸ்ஜி சூர்யா கைதானது ‘பொய்யா’? அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைப்பது ‘பீதியை பரப்புவதா’? மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண உழைப்பது நம் கடமை. இந்த உழைப்புக்கு ஆயுதம் வேறில்லை. இதற்கு கவசம் தேவையில்லை. இதுவே உண்மை.”

சு.வெங்கடேசன்: ”மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே இல்லையே என்பதை தாண்டி செல்வது பொய்க்கு துணை போவதில்லையா, பீதிக்கு உதவி செய்வதில்லையா? ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது அபாண்ட பழி சுமத்துவதை நீங்கள் கண்டிக்க வேண்டாமா? உண்மையை கடப்பதும் பொய்யின் மாறுவேடமே.”