ருத்ரன் – விமர்சனம்
நடிப்பு: ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்யராஜ், காளிவெங்கட், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர்
இயக்கம்: எஸ்.கதிரேசன்
ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்
படத்தொகுப்பு: ஆண்டனி
பாடலிசை: ஜி.வி.பிரகாஷ், தரண்குமார்
பின்னணி இசை: சாம் சி.எஸ்
தயாரிப்பு: எஸ்.கதிரேசன்
பத்திரிகை தொடர்பு: நிகில்
அது ஓர் உயர் நடுத்தர வர்க்கத்துக் குடும்பம். போக்குவரத்து நிறுவனம் நடத்தும் அப்பா (நாசர்), குடும்பப் பொறுப்பை கவனித்துக்கொள்ளும் அம்மா (பூர்ணிமா பாக்யராஜ்), இவர்களின் செல்லமான ஒரே மகன் ருத்ரன் (ராகவா லாரன்ஸ்) ஆகியோர் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
ருத்ரன், மருத்துவமனையில் பணியாற்றும் அனன்யாவை (பிரியா பவானி சங்கர்) தற்செயலாக சந்திக்கிறார்; காதல் கொள்கிறார். அனன்யாவுக்கும் ருத்ரன் மீது காதல் பிறக்க, அது திருமணம் வரை செல்கிறது.
இந்நிலையில், தொழிலை விரிவுபடுத்த கடனாக வாங்கிய ரூ.6 கோடியுடன், அப்பாவின் நண்பர் தலைமறைவாக, அந்த அதிர்ச்சியில் உயிரிழக்கிறார் அப்பா. அந்த கடனை அடைக்க வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்கிறார் ருத்ரன்.
இதுபோல் குடும்பத்தை இந்த ஊரிலேயே விட்டுவிட்டு வெளிநாடு செல்பவர்களின் குடும்பத்தினரை ரவுடி பூமி (சரத்குமார்) ஆட்கள் சந்தேகம் ஏற்படாதவாறு கொன்று, அவர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் ரவுடி பூமி அண்ட் கோ, நாயகன் ருத்ரனின் குடும்பத்தை கொன்றுவிடுகிறது. இதை தெரிந்துகொள்ளும் ருத்ரன் எப்படி அவர்களை பழி தீர்க்கிறார் என்பது ‘ருத்ரன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் ருத்ரனாக வரும் ராகவா லாரன்ஸ், வழக்கம்போல் தனது அட்டகாசமான, தனித்துவமான நடனம், அதிரடியான சண்டை, புன்னகை சிந்த வைக்கும் காமெடி, உள்ளத்தை உருக்கும் செண்டிமென்ட், பஞ்ச் வசனம் ஆகியவற்றால் அசத்தியிருக்கிறார்.
நாயகனின் காதலி அனன்யாவாக வரும் பிரியா பவானி சங்கர், குடும்பப் பாங்கான கதாபாத்திரத்துக்கு அழகாகப் பொருந்தி, அதற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ரவுடி பூமியாக வில்லன் கதாபாத்திரத்தில் வரும் சரத்குமார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிரட்டலான வில்லத்தனம் காட்டி பயமுறுத்தி இருக்கிறார். நிகழ்கால வில்லன் கதாபாத்திரத்தை விட பிளாஷ்பேக்கில் வரும் கதாபாத்திரத்தை இவர் இன்னும் சிறப்பாக செய்திருக்கிறார்.
நாயகனின் அம்மாவாக வரும் பூர்ணிமா பாக்யராஜ், அப்பாவாக வரும் நாசர், நண்பனாக வரும் காளி வெங்கட், போலீசாக வரும் இளவரசு, நாயகனுக்கு உதவும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் தங்களுக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளரான எஸ்.கதிரேசன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார். ”பெற்றோர்களை கைவிட்டு விடாதீர்கள்” என்ற அருமையான கருத்தைச் சொல்லவந்த இயக்குனர், பார்த்துப் பார்த்து சலித்த கதாபாத்திரங்கள், காட்சியமைப்பு, திரைக்கதை ஆகியவற்றின் மூலம் அதைச் சொல்லி சோர்வடையச் செய்வதால், அவருடைய முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராய் வீணாகியிருக்கிறது. எனினும், ராகவா லாரன்ஸின் ரசிகர்களுக்குப் பிடிக்கக்கூடிய சில அம்சங்களை ஆங்காங்கு வைத்திருப்பதன் மூலம் இயக்குனர் பாஸாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஜி.வி.பிரகாஷ்குமார், தரண்குமார் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. குறிப்பாக ‘ஜொர்தாலயா’, ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடல்கள் அருமை. இப்பாடல்களின் காட்சி அமைப்பும் பின்னணி வண்ணங்களும் பிரமாதம்.
சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை, வழக்கம் போல் ஓ.கே ரகம். ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் படத்தொகுப்பும் படத்தின் சிறப்பான மேக்கிங்குக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன.
‘ருத்ரன்’ – ராகவா லாரன்ஸின் ரசிகர்களுக்குப் பிடிக்கும்!