ஆர்எஸ்எஸ். போல கம்யூ. கட்சிகளுக்கும் ‘தொண்டர் படை’யும் ‘அணிநடை’யும் அவசியம்!

ஆர்எஸ்எஸ்சினால் தலைமை தாங்கப்படும் பிஜேபி ஒரு பாசிச வன்முறை அரசியல் அமைப்பு. அதனிடம் ஜனநாயகப் பண்புகள் இல்லை. சகலவிதமான நிறுவனங்கள், அரச கட்டுமானங்கள், சிவில் சமூக அமைப்புகள் என அனைத்தையும் தனது கட்சிக் கருத்தியலின் கீழ் கொணர்வதுதான் அதனது இலக்கு. நீதித்துறையிலும் கணிசமாக அது இதனைச் சாதித்துவிட்டது. நாசி சித்தாந்தம் ஜெர்மனியை முழுமையாக ஆட்கொள்வதற்கு முன்பிருந்த நிலைமை இது.

ஆர்எஸ்எஸ் ஒரு பாரா மிலிட்டரி அமைப்பு. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு காலத்தில் மாவட்டம் தோறும் பயிற்சி பெற்ற தொண்டர் படைகளைக் கொண்டிருந்தது. இப்போது தற்பாதுகாப்புக்காகவேனும் அது திரட்சியடைய வேண்டும். ஆர்எஸ்எஸ் ஆயுதப் பயிற்சி உட்பட பயிற்றுவிக்கப்பட்ட அமைப்பாக, அரச நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படும் அமைப்பாக ஆகியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் வீதிகளில் அணிநடை பயில முடிகிறது எனில், இடதுசாரிகளுக்கு ஏன் அந்த உரிமை இல்லை? இது சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எனில், முதலில் ஆர்ஸ்எஸ் அணிநடைகளைத் தடை செய்ய வேண்டும் அல்லவா?

ஜனநாயகக் கோரிக்கைகளை எழுப்புவது எவ்வாறு சவாலோ, அது போன்ற சவாலாக இடதுசாரிகளின் இத்தகைய அணிநடைகளும் இருக்கும். வெறும் ஜனநாயகக் கோஷங்கள் இழப்புகளை உருவாக்க மட்டுமே செய்யும். இன்றைய கேள்வி சோசலிசமா, காட்டுமிராண்டித்தனமா என்பதல்ல. நேருவிய மரபு உருவாக்கித் தந்த பன்முக ஜனநாயகமா, அல்லது பிஜேபி-ஆர்எஸ்எஸ்சின் காட்டுமிராண்டித்தனமா? என்பதுதான்.

YAMUNA RAJENDRAN