“ரஜினியும், பாஜகவும் கூட்டணியாக போட்டியிடுவது சாத்தியமே”: ஆர்எஸ்எஸ் கணிப்பு!
ஆர்எஸ்எஸ்-ன் அதிகாரப்பூர்வ ‘தி ஆர்கனைசர்’ ஆங்கில இதழின் முன்னாள் ஆசிரியர் சேஷாத்ரி சாரி. இவர் தற்போது பாஜகவின் வெளியுறவுக் கொள்கை பிரிவின் தலைவராக உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து ‘தி இந்து’ வுக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி உங்கள் கருத்து?
சிறந்த வரலாற்றையும், பெருமைமிகு கலாச்சாரத்தையும் கொண்டது தமிழகம். பொருளாதார வளமும், கடுமையான உழைப்பாளிகளும் நிறைந்தது. ரஜினி அரசியலுக்கு வருவது என்பது பல ஆண்டுகளாக நிலவிவந்த பேச்சாகும். ரஜினி தனது ரசிகர்களுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி, அரசியலில் ஈடுபடும் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. நல்ல ஆளுமையும், சிறந்த நிர்வாகத் திறனும் கொண்டவர்களை அவர் தனது கட்சியில் சேர்க்க வேண்டும். அதிமுகவினரும், திமுகவினரும் ரஜினியின் கட்சியில் நுழைய முயற்சிப்பார்கள். சரியானவர்களை ரஜினி தேர்வு செய்யாவிடில் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை இழப்பதுடன், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த முடியாமலும் போய்விடும். ரஜினி பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர். அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். சரியான நேரத்தில் அரசியலில் குதித்துள்ளார்.
ஜெயலலிதா இறப்பு மற்றும் கருணாநிதியின் ஓய்வினால் தமிழகத்தில் நிலவும் வெற்றிடத்தை ரஜினி அல்லது கமலால் நிரப்ப முடியுமா?
கமலஹாசன், சரியான அரசியல் நோக்கமற்ற, தெளிவான பார்வையற்ற குழப்பமடைந்த மனிதர். தற்போதைய தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதில் ஐயமில்லை. இதை நிரப்ப நேர்த்தியான சமூக அரசியல் தலைவர்கள் இல்லை என்பதும் உண்மை. இந்த கட்டத்தில் ரஜினிகாந்த், தேசிய கொள்கையுடைய, சுயநலமற்ற, சேவை மனப்பான்மை கொண்ட நல்ல மனிதர்களை ஒன்றிணைத்து அரசியல் செய்ய வேண்டும். அப்போது தான் அவர் தமிழகத்தின் வெற்றிடத்தை நிரப்ப முடியும்.
கிருஷ்ணகிரியின் கிராமம், மராட்டியர், கர்நாடகாவை சேர்ந்தவர் என ரஜினியின் பூர்வீகம் பற்றிய பேச்சில் எது உண்மை என கருதுகிறீர்கள்?
ரஜினியை பொறுத்தவரை அவர் யாராக இருந்தாலும் தமிழ் மக்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள்.
ரஜினி தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி, அதில் அரசியல் அனுபவம் கொண்டவர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுத்தால் அவருக்கு வெற்றி கிட்டும்.
பாஜக பேச வேண்டிய ஆன்மீக அரசியலை ரஜினி கையில் எடுத்துள்ளாரே?
இன்றைய தமிழகத்தில் ஊழல், கலவர சூழல் மற்றும் பிரிவினைவாதம் உள்ளது. தமிழகத்திற்கு மிகவும் அந்நியமான இவை திராவிடக் கட்சிகளின் பங்களிப்பு ஆகும். இதில் ஒரு ஆன்மீகவாதியாக ரஜினி தலையிட்டால் தமிழகத்தை சுத்தப்படுத்தி விடுவார். ‘யார் ஒருவர் அரசியலுக்கும், மதத்திற்கும் தொடர்பு இல்லை எனக் கூறுகிறாரோ அவருக்கு மதம் என்றால் என்ன என்று தெரியாது’ என மகாத்மா காந்தி கூறியதை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.
ரஜினியை பாஜக தங்கள் பக்கம் இழுக்க முயன்றது உண்மையா?
தமிழக பாஜகவினர் தங்கள் கட்சியில் ரஜினி இணைய வேண்டும் என விரும்பியது உண்மை. இதற்கு அவர் பதில் சொல்லாமல் இருந்தார். இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒத்த கருத்துள்ள நண்பராக ரஜினி இருந்தார். ஊழலை ஒழிக்க மோடி எடுத்த முயற்சிகளையும் ரஜினி பாராட்டி வந்தார். இந்த கட்டத்தில் பாஜகவும், ரஜினியும் கூட்டணியாக போட்டியிடுவது சாத்தியமே.
ஆனால், அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ரஜினி அறிவித்துள்ளாரே?
தேர்தல் நெருங்கும்போது தான் அந்த முடிவை உறுதி செய்ய முடியும்.
பிரதமர் மோடி, ரஜினி ஆகிய இரு நாயகர்களும் இணைந்தால் தமிழகத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறீர்கள்?
ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகழுடன் ஊழலற்ற முன்னேற்றக் கொள்கை கொண்ட மோடியின் அரசியலும் இணைந்தால் தமிழகம் விரைவாக முன்னேறும்.
Courtesy: Tamil.thehindu.com