ரூ.500, ரூ.1000 விவகாரம்: மாநிலங்களவையில் மோடி அரசை கிழித்து தொங்க விட்ட எதிர்க்கட்சிகள்!
நாடு முழுவதும் ரூ.1000, 500 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதற்கு காங்கிரஸ், அதிமுக, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (புதன்கிழமை) கடுமையாக விமர்சித்தன.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசும்போது, “ஒரே இரவில் 86% பணத்தை புழக்கத்திலிருந்து அரசு தடை செய்துள்ளது. அப்படியெனில் அரசு அந்த பணம் அத்தனையும் கள்ளப்பணம் என நினைத்ததா? அப்படி என்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு வெளியிட்ட அறிக்கையில் புழக்கத்தில் உள்ள பணத்தில் 0.02% மட்டுமே கள்ளப்பணம் என ஏன் சொன்னது.
மத்திய அரசில் அங்கம் வகிப்பவர்கள் எல்லோருமே மருத்துவம் படிக்காமலே மருத்துவர்கள் போல் அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாகிவிட்டனர். காரணம் அவர்கள் அவ்வப்போது நடத்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்.
சாதாரண மக்களை பாதிக்கும் நடவடிக்கையை எடுத்துவிட்டு சுவிஸ் வங்கியில் பணத்தை குவித்துவைத்திருப்பவர்களை வெளியிட அரசு ஏன் தயங்குகிறது? வங்கிகளில் பெருமளவில் பணத்தை கடனாக வாங்கிவிட்டு அவற்றை திருப்பிச் செலுத்தாவதற்கள் பெயரை இந்த அரசு வெளியிடுமா?
நோட்டு நடவடிக்கையை அறிவிப்பதற்கு முன்னரே அரசு முன்னேற்படுகளை செய்திருந்தால் இப்போது பணப் பற்றாக்குறை வந்திருக்காது. சொந்த நாட்டில் மக்கள் பணத்துக்காக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்க பிரதமரோ ஜப்பான் நாட்டில் புல்லட் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்து மக்களை அவர் அவமானப்படுத்திவிட்டார். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாளைக்கு ஐந்து முறை உடையை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
நோட்டு நடவடிக்கை மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். ஆனால், பாரத ஸ்டேட் வங்கிக்கு கடந்த மார்ச் மாதமே நோட்டு நடவடிக்கை குறித்து தெரியும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசு தனக்கு சாதகமானவர்களுக்கு மட்டுமே நோட்டு நடவடிக்கை குறித்த தகவலை கசியவிட்டிருக்கிறது” என்றார்.
மோடியை ஹிட்லர், முசோலினியுடன் ஒப்பிட்ட பிரமோத் திவாரி
மாநிலங்களவை விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரமோத் திவாரி, பிரதமர் மோடியை ஹிட்லர், முசோலினி, மற்றும் கடாஃபி ஆகிய சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டார்.
அவர் பேசும்போது, “சீதாராம் யெச்சூரி கோரியது போல் ரூ.500, 1000 நடவடிக்கை மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசை ஏதோ சிட்பண்ட் நிறுவனம் போல் மாற்றிவிட்டீர்கள்.
சில தொடர் நோட்டுகளை மட்டுமே புழக்கத்திலிருந்து விடுவிக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் 86% நோட்டுகளை முடித்துள்ளீர்கள். உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? அயல்நாடுகளுக்கு அனுப்பும் தொகையின் உச்ச வரம்பை அதிகரித்ததன் மூலம் 10 மாதங்களாக இதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்.
உங்களுக்கு ‘பிடித்தமான’ மாநிலங்களில் நிறைய பணம் டெபாசிட் ஆகியுள்ளன. பிரதமர் 50 நாட்கள் கேட்கிறார், ஆனால் 50 நாட்களுக்குப் பிறகு ராபி, கரீப் விளைச்சலை வாங்க ஒருவர் கூட எஞ்சியிருக்க மாட்டார்கள். நம் விவசாயிகளை பிச்சைக்காரர்களாக்கி விட்டீர்கள். உங்களுக்கு மன்னிப்பே கிடையாது.
நம் பிரதமரை இந்த விஷயத்தில் ஹிட்லர், முசோலினி, கடாஃபியுடன் ஒப்பிடலாம்,” என்றார்
இவ்வாறு இவர் பேசியவுடன் எதிர்ப்பு கிளம்பியது. ஹிட்லருடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்று ரவிசங்கர் பிரசாத் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் பிரமோத் திவாரி தனது ஒப்பீட்டை தொடர்ந்தார். கடைசியில் “ஒரே வழிதான் உள்ளது, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்கவும், நீங்கள் கறுப்புப் பணத்தை ஒழிக்க இதனைச் செய்யவில்லை. உங்கள் நண்பர்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை” என்று முடித்தார் தன் பேச்சை.
அதிமுக எதிர்ப்பு:
ரூபாய் நோட்டு நடவடிக்கையால் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் சேமிப்பும் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசினார். அதிமுக எப்போதுமே கறுப்புப்பணத்தை எதிர்க்கிறது. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் எங்கள் கட்சி எப்போதுமே வரவேற்றிருக்கிறது. கறுப்புப் பணத்தை முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கிறார்.
ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இவ்வாறாக புழக்கத்தில் இருந்த பணத்தை செல்லாது என அறிவித்ததால் கிராமப்புறங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை மத்திய அரசு படிப்படியாக செயல்படுத்தியிருக்க வேண்டும் என அவர் கூறினார்.
மக்களை ஏன் வதைக்கிறீர்கள்?- சீதாராம் யெச்சூரி
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பொதுமக்களை ஏன் வதைக்கிறீர்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறும்போது, “தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பணம் இலாமல் மக்கள் தவிக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் பாஜக தனது கட்சி நிதியை பிரதமர் அறிவிப்பதற்கு முன்னதாகவே வங்கியில் செலுத்தியது எப்படி? இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாற்று ஏற்பாடுகள் முழுமை பெற 50 நாட்கள் ஆகும் என பிரதமரே சொல்லியிருக்கும் நிலையில் அதுவரை மக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு பழைய நோட்டுகளையே பயன்படுத்தலாம் என அறிவியுங்கள்” என்றார்.
மாயாவதி சரமாரி தாக்கு:
மாநிலங்களவை விவாதத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசும்போது, மத்திய அரசின் ரூ.500, 1000 நோட்டுகள் மீதான நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.
பணக்காரர்களை பாதுகாக்க மத்திய அரசு உதவி செய்ததாக குற்றம்சாட்டி அவர் மேலும் பேசும்போது, “நிதி நெருக்கடி நிலை பிரகடனம் போல் செய்துவிட்டனர். இந்தியாவே முடக்கப்பட்டது போல் உள்ளது. ஜப்பானிலிருந்து வந்த பிரதமர் காஸியாபூர் கூட்டத்தில் பேசும்போது தான் ஊழலுக்கு எதிரானவர் என்றார். ஆனால் அவர் பேசிய கூட்டத்திற்கு செய்யப்பட்ட ஏற்பாடே ஊழல் வழிமுறைகளைக் கையாண்டு செய்யப்பட்டதுதான்.
தனது கட்சியினர், சாதகமானோர் மற்றும் பணக்காரர்கள் பெரிய நோட்டுகளுக்கான ‘தகுந்த’ ஏற்பாடுகளை செய்யும் வரை காத்திருந்து 10 மாதங்கள் எடுத்துக்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பகுஜன் முன்னதாக கட்சியாகும் முன் இயக்கமாகவே வளர்ந்தது, சாதாரண மக்களிடமிருந்து நிதி திரட்டியே கட்சியை வளர்த்தோம், கோடீஸ்வர நபர்களிடமிருந்து நிதி திரட்டவில்லை.
இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அலட்சியம் காட்டிய அரசு, பணக்காரர்கள் தங்கள் பணத்தை பாதுகாக்க உதவி புரிந்துள்ளது. தற்போது உங்கள் பலவீனங்களை மறைக்க மற்ற கட்சியினரை குற்றம் சொல்லத் தொடங்கியுள்ளீர்கள்.
ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து இத்தகைய நடவடிக்கையை எடுக்கக் காரணம் உத்தரப் பிரதேசம் மற்றும் பிற மாநில தேர்தல்களே. இந்த மாநில மக்கள் நிச்சயம் உங்களுக்கு தண்டனை அளிப்பார்கள். மக்கள் கையில் மை-யை பூசியதற்கான தகுந்த பலனை எதிர்பார்க்கலாம்’ என்றார் மாயாவதி.
Courtesy: tamil.thehindu.com