“ஏழைகளுக்கே பாதிப்பு”: மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு!

ரூ.500, ரூ.1000 செல்லாது என திடீரென நரேந்திர மோடி அறிவித்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் காலை முதல் நோட்டு நடவடிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
பிற்பகலில் நோட்டு நடவடிக்கை குறித்து அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசினார். “அருள் இலார்க்கு அவ்வுலகம் இல்லை” என்ற திருக்குறளை வாசித்துக்காட்டி தனது பேச்சை அவர் தொடங்கினார். அவர் பேசியதாவது:
பொது மக்களின் பணத்துக்கு பாதுகாவலன் ரிசர்வ் வங்கி. ஆனால், இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் கிராமப்புற மக்களின் பணத்தை பாதுகாக்கத் தவறி, ரிசர்வ் வங்கி தோற்றுவிட்டது.
இந்திய மக்களின் சேமிப்பு பழக்கம் பரவலாக பாராட்டப் பெற்றது. சர்வதேச அளவில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டபோதுகூட இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கக் காரணம் இந்தியர்களின் சேமிப்பு பழக்கம்.
ஆனால், அந்த சேமிப்புப் பழக்கத்துக்கு இப்போது பாதகம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் ஒரு பெண் தனது குடிகார கணவருக்குத் தெரியாமல் ரூ.20,000 சேமித்து வைத்திருந்திருக்கிறார். மத்திய அரசின் நோட்டு நடவடிக்கையை அடுத்து அவர் வங்கிக்கு பணத்தை மாற்றச் சென்றுள்ளார். அப்போது அவரது பணத்தை யாரோ திருடிச் சென்றுள்ளனர். மனமுடைந்த அவர் வீடு திரும்பி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆனால், அதேவேளையில் சூரத்தில் ஒரு வியாபாரி கோடிக்கணக்கில் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார். அவருக்கு அபராதம், வருமான வரி போகவே பல கோடி ரூபாய் பணம் கையில் கிடைக்கும் எனத் தெரிகிறது.
இதுதான் மத்திய அரசு நோட்டு நடவடிக்கை அறிவித்ததன் விளைவு.
மத்திய அரசின் நோட்டு நடவடிக்கையால் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் சேமிப்பும் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பழைய நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அறிவித்தது. தமிழகத்தில் இதனால் கிராமப்புற ஏழை, எளிய மக்களே வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக எப்போதுமே கறுப்புப்பணத்தை எதிர்க்கிறது. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் எங்கள் கட்சி எப்போதுமே வரவேற்றிருக்கிறது. கறுப்புப் பணத்தை முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கிறார்.
ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இவ்வாறாக புழக்கத்தில் இருந்த பணத்தை செல்லாது என அறிவித்ததால் கிராமப்புறங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை மத்திய அரசு படிப்படியாக செயல்படுத்தியிருக்க வேண்டும்.
கிராமங்களில் வங்கிகள் குறைவு. அவ்வாறு வங்கியிருந்தாலும் அவற்றில் சேமிக்கும் பழக்கம் பெரும்பாலான கிராமவாசிகளிடம் இல்லை. இந்நிலையில் அரசின் திடீர் அறிவிப்பால் கிராமங்களில் சுப காரியாங்கள் முடங்கியுள்ளன. அவசர மருத்துவச் செலவுகள் ஏன் மரணம் நிகழ்ந்த வீட்டில்கூட செலவுக்கு காசு இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் சாதாரண மக்கள்தான் வரிசையில் நின்று காத்திருக்கின்றனர். பணக்காரர்களுக்கு தங்கள் பதுக்கல் பணத்தை எப்படி தங்கமாக மாற்ற வேண்டும் என்பது தெரியும்.
ஏற்கெனவே நம் நாட்டின் கிராமப்புற பொருளாதாரம் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கிராமப்புற பொருளாதாரம் மேலும் மோசமடைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.