புழக்கத்துக்கு வந்த மூணே நாளில் ரூ,2000 கள்ள நோட்டு: கர்நாடகாவில் சிக்கியது!
2000 ரூபாய் நோட்டை மோடி அரசு அறிமுகப்படுத்தி முழுசாக 3 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் 2000 ரூபாய் கள்ள நோட்டு கர்நாடக மாநிலத்தில் புழக்கத்துக்கு வந்துவிட்டது. அந்த கள்ள நோட்டை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் அசோக் என்ற வெங்காய விவசாயி, அங்குள்ள ஏபிஎம்சி மார்க்கெட்டில் வெங்காயம் விற்றுக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது முன்பின் தெரியாத ஆசாமி ஒருவர் அசோக்கிடம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து, “இது புது நோட்டு, செல்லும்” என்று கூறி வெங்காயம் வாங்கி சென்றுவிட்டார்.
பின்னர் அசோக் அந்த நோட்டை தன் நண்பர்களிடம் காட்டி உள்ளார். அப்போது தான் அது உண்மையான நோட்டு இல்லை என்றும், அது போட்டோகாபி எடுக்கபட்ட நோட்டு எனவும் தெரியவந்தது. இது குறித்து அசோக் போலீசில் புகார் செய்து உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கள்ள நோட்டு ஆசாமியை தேடி வருகிறார்கள்.
மோடி அரசு வெளியிட்ட புதிய ரூ.2000 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்து முழுசாக 3 நாட்கள் கூட ஆகாத நிலையில், அதற்குள் ரூ.2000 கள்ள நோட்டு புழக்கதிற்கு வந்திருப்பது பொதுமக்களிடையே பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
“புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அதனால் அதை வைத்து கள்ள நோட்டு தயாரிக்க முடியாது” என்று மோடி அரசு காலரை தூக்கிவிட்டுக்கொண்டு திரிந்தது.
ஆனால் உண்மையில், புதிய 2000 ரூபாய் நோட்டில் போதுமான அளவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படவில்லை என்பதையும், அதனால் அதே போன்று கள்ளநோட்டுகள் தயாரிப்பதில் கிரிமினல் கும்பலுக்கு சிரமம் இருக்காது என்பதையும், பாதுகாப்பு காரணத்திற்காக புதிய நோட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு கூறும் அம்சங்கள் கள்ள நோட்டு கும்பலால் எளிதில் காப்பியடிக்கப்பட முடியும் என்பதையும் மேற்கண்ட கர்நாடகா சம்பவம் உணர்த்துகிறது.