ரூட் நம்பர் 17 – விமர்சனம்

நடிப்பு: ஜித்தன் ரமேஷ், அஞ்சு. அருவி மதன், ஹரிஷ் பெராடி, டாக்டர் அமர் ராமச்சந்திரன், ஜெனிஃபர், அகில் பிரபாகர், நிஹால் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: அபிலாஷ் ஜி தேவன்

இசை: அவுசப்பச்சன்

ஒளிப்பதிவு: பிரசாந்த் பிரணவம்

படத்தொகுப்பு: அகிலேஷ் மோகன்

தயாரிப்பு: நேநி எண்டர்டெயின்மெண்ட்ஸ்

தயாரிப்பாளர்: டாக்டர் அமர் ராமச்சந்திரன்

பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்

ரூட் நம்பர் 17 என்பது அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் செல்லும் சிமெண்ட் சாலையின் பெயர். இந்த சாலையில் இக்கதையின் முக்கிய சம்பவங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்வதால் இப்படத்துக்கு இந்த சாலையின் பெயரை தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

போன்கால் தொந்தரவு கூட இல்லாமல் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்களது செல்போன்களைக் கூட தங்கள் அறைகளிலேயே விட்டுவிட்டு, கார்த்திக்கும் (அகில் பிரபாகர்), அவரது காதலி அஞ்சனாவும் (அஞ்சு) காரில் ‘ஜாலி ட்ரிப்’ கிளம்பிப் போகிறார்கள். வழியில் காரை நிறுத்தி, மறக்காமல் ஆணுறை வாங்கிக் கொள்கிறார் கார்த்திக்.

0a1aகார் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள சாலையான ரூட் நம்பர் 17-ல் செல்லும்போது, அந்த காதல் ஜோடியை மடக்கிக் கடத்துகிறார், காட்டுமிராண்டி போல் தோற்றம் கொண்ட ஃபிரெடி (ஜித்தன் ரமேஷ்). இக்காட்டுக்குள் பூமிக்கடியில் இருக்கும் பிரமாண்டமான பாதாள குகைக்குள் அவர்களை இழுத்துச் செல்லும் ஃபிரெடி, கார்த்திக்கை அடித்தே கொலை செய்கிறார். அஞ்சனாவை அணு அணுவாக சித்ரவதை செய்கிறார். அங்கிருந்து அஞ்சனா தப்பிக்க முயலும்போதெல்லாம் ஃபிரெடியால் துரத்திப் பிடிக்கப்பட்டு, பாதாள குகைக்குள் அடைக்கப்பட்டு, கூடுதலாக கொடுமைப்படுத்தப்படுகிறார்.

காணாமல் போன காதலர் கார்த்திக் முன்னாள் அமைச்சர் குருமூர்த்தியின் (ஹரிஷ் பெராடி) மகன் என்பதால், அந்த காதல் ஜோடியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை தீவிரமாக இறங்குகிறது. அப்போது தான் அந்த காட்டுப் பகுதியில் இதுபோல் பல மர்ம சம்பவங்கள் ஏற்கெனவே நடந்திருப்பது தெரிய வருகிறது.

ரூட் நம்பர் 17 சாலையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர்  சலீம் முகம்மதுவையும் (டாக்டர் அமர் ராமச்சந்திரன்) ஃபிரெடி கடத்திக் கொண்டுபோய் பாதாள குகைக்குள் இருக்கும் பக்கத்து அறையில் அடைத்து வைக்கிறார்.

காதல் ஜோடியையும், இன்ஸ்பெக்டர் சலீம் முகம்மதுவையும் தேடி களத்தில் குதிக்கிறார் கான்ஸ்டபிள் விக்னேஷ் (அருவி மதன்). இவரது தேடுதல் வேட்டைக்கு வெற்றி கிடைத்ததா? காட்டுக்குள் கொடூர குற்றச் சம்பவங்களை அரங்கேற்றும் ஃபிரெடி யார்? எதற்காக இப்படியொரு வாழ்க்கை வாழ்கிறார்? அவருடைய பின்னணி என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது  ‘ரூட் நம்பர் 17’ திரைப்படத்தின் மீதிக்கதை.

சைக்கோத்தனமான எதிர்மறை நாயகன் ஃபிரெடியாக நடித்திருக்கும் ஜித்தன் ரமேஷ், காட்டுமிராண்டி போன்ற தோற்றத்தில், அச்சமூட்டும் வகையில், அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார். அதிகம் பேசாமல், மௌன மொழியாலும் உடல்மொழியாலும் உணர்வுகளை வெளிப்படுத்தி, தன்னிடம் சிக்கிக்கொண்ட கதாபாத்திரங்களையும், பார்வையாளர்களையும் பயமுறுத்த முயற்சித்திருப்பவர், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சமகாலத்தில் ஃபிரெடியாக சைக்கோ போல் நடித்திருப்பவர், பிளாஷ்பேக்கில், சிறுவன் ஃபிரெடியின் அப்பாவாக, நேர்மையான பொறியியலாளர் ஜானாக இன்னொரு வேடத்தில், அழகான லுக்கில் நடித்து கவனம் பெறுகிறார். இதுவரை ‘ஜித்தன் ரமேஷ்’ என அழைக்கப்பட்டவரை இனிமேல் ‘ரூட் நம்பர் 17 ரமேஷ்’ என்று பெருமையாக அழைக்கலாம் எனும் அளவுக்கு இருக்கிறது அவரது சிறப்பான நடிப்பு.

அஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஞ்சு, ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் இயல்பான தோற்றத்தில் இருக்கிறார். அதன்பிறகு, பாதாள குகைக்குள் சிக்கிக்கொண்ட பின், சேறும் அழுக்கும் படிந்த உடலோடு, அடி வாங்குவது, விழுவது, எழுவது, ஓடுவது என மிகவும் கடினமாக உழைத்து பார்வையாளர்களின் அனுதாபத்தை அள்ளுகிறார். அவரது காதலர் கார்த்திக்காக நடித்திருக்கும் அகில் பிரபாகர் மிகச்சில காட்சிகளில் மட்டும் வந்தபோதிலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் குருமூர்த்தியாக வரும் ஹரிஷ் பெராடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சலீம் முகம்மதுவாக வரும் டாக்டர் அமர் ராமச்சந்திரன், போலீஸ் கான்ஸ்டபிள் விக்னேஷாக வரும் அருவி மதன், ஃபிளாஷ்பேக்கில் பொறியியலாளர் ஜானின் மனைவி ஜென்னியாக வரும் ஜெனிஃபர், இவர்களது மகன் சிறுவயது ஃபிரெடியாக வரும் நிஹால், ஃபிரெடி காட்டுக்குள் செய்யும் குற்றச்செயல்களை நியாயப்படுத்தி அவருக்கு ஆதரவாக இருக்கும் பத்திரிகையாளர் நடராஜனாக வரும் டைட்டஸ் ஆபிரஹாம் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான அளவு நடித்திருக்கிறார்கள்.

காட்டுச்சாலையில் நடக்கும் திகில் சம்பவங்களை மையமாக வைத்து, கிரைம் த்ரில்லர் ஜானரில் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன். கதையில் புதுமை இல்லை என்றாலும், கதாபாத்திரங்களில், காட்சியமைப்புகளில் வேறுபாடு காட்டி, படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்று, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர்.

பாதாள குகையை இயற்கையானது போல் வடிவமைத்த கலை இயக்குனர் பேபோர் முரளி, பாதாள குகையின் குறுகலான இடத்திலும், அடர்ந்த காட்டிலும் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கிய ஒளிப்பதிவாளர் பிரஷாந்த் பிரணவம், இனிமையான பாடல்களையும், காட்சிகளுக்கு வலு சேர்க்கும் பின்னணி இசையையும் கொடுத்த இசையமைப்பாளர் அவுசிப்பச்சன் ஆகியோர் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

‘ரூட் நம்பர் 17’ – நெஞ்சம் பதைபதைக்கச் செய்யும் திகிலான திரில்லர் பயணம்!