ராக்கி – விமர்சனம்
நடிப்பு: பாரதிராஜா, வசந்த் ரவி, ரோகிணி, ரவீனா ரவி
இயக்கம்: அருண் மாதேஸ்வரன்
ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா
இசை: தர்புகா சிவா
கடத்தல், கொலை என சகட்டுமேனிக்கு கொடூர குற்றங்களைச் செய்பவன் மணிமாறன் (பாரதிராஜா). அவனிடம் வேலை பார்ப்பவன் ராக்கி (வசந்த் ரவி). மணிமாறனின் மகனுக்கும் ராக்கிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் ராக்கியின் அம்மா மல்லி (ரோகிணி) கொலை செய்யப்படுகிறாள். இதனால் கோபமடையும் ராக்கி, மணிமாறனின் மகனை கொலை செய்கிறான்.
ஜெயிலுக்கு சென்று பல ஆண்டுகள் கழித்து திரும்பும் ராக்கி, திருந்தி வாழ முயற்சி செய்கிறான். ஆனால், அவனை கொலை செய்ய மணிமாறன் துடிக்கிறான். இறுதியில் மணிமாறன் ராக்கியை கொலை செய்தானா? ராக்கி மணிமாறனின் தொந்தரவை எப்படி சமாளித்தான்? என்பது படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் வசந்த் ரவி, வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மா, தங்கை பாசம், சண்டை, ஏக்கம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். தங்கையாக வரும் ரவீனா ரவி, கோபம், பாசம் என நடிப்பில் வேற்றுமை காண்பித்து இருக்கிறார். படம் பார்ப்பவர்களை தன் மீது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரோகிணி.
பாரதிராஜா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். வேறொரு பாரதிராஜாவை பார்க்க முடிகிறது. மகனை கொன்றவனை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று துடிப்பது பாசத்தின் உச்சம். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
ரவுடியிசம், பழிக்குப் பழி வாங்கும் கதையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். வழக்கமான கதை என்றாலும் அதில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். திரைக்கதை நகர்வுக்கு ஏற்றார் போல் ஒரு தலைப்பு வைத்து இயக்கி இருப்பது சிறப்பு.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். அதுபோல் தர்புகா சிவாவின் இசையும் வலு சேர்த்து இருக்கிறது. கதையோடு பயணிக்கும் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
‘ராக்கி’ – கொடூர வன்முறையை ஆராதிப்பவர்களுக்கு பிடிக்கும்!