ராக்கெட்ரி – விமர்சனம்

நடிப்பு: ஆர்.மாதவன், சூர்யா, சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, கார்த்திக் குமார் மற்றும் பலர்

இயக்கம்: ஆர்.மாதவன்

பின்னணி இசை: சாம் சி.எஸ்.

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

இது ஒரு பயோபிக் ஜானர் திரைப்படம். இந்தியாவின் முதன்மையான விண்வெளி அறிவியலாளர்களில் ஒருவரும், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியுமான நம்பி நாராயணன், ராக்கெட் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டார். மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அவரது வாழ்க்கையையும், அவர் அனுபவித்த துன்பங்களையும்,, தான் ஒரு நிரபராதி என்பதை அவர் இச்சமூகத்துக்கு நிரூபிக்க நடத்திய போராட்டத்தையும் தழுவி ’ராகெட்ரி – நம்பி எஃபெகட்’ என்ற இந்த படம் உருவாகியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், இஸ்ரோவில் பணியாற்றும் நம்பி நாராயணனும் (ஆர்.மாதவன்), அவரது மனைவி மீனா (சிம்ரன்) உள்ளிட்ட குடும்பத்தினரும், வரவிருக்கும் ஆபத்து தெரியாமல் வழக்கமான காலைநேர மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்கிற விதமாய் படம் ஆரம்பமாகிறது. சற்றுநேரத்தில் கேரள போலீசார் திடுமென நம்பி நாராயணனை வளைத்துப் பிடிக்கிறார்கள். தாக்குகிறார்கள். கைது செய்கிறார்கள். இதனால் நம்பி மற்றும் அவரது குடும்பத்தினரின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறிப்போகிறது.

0a1c

19 ஆண்டுகளுக்குப்பின் முழுக்க நரைத்த தாடி, தலைமுடி கொண்ட வயோதிக நம்பியை நமக்கு காட்டுகிறார்கள். அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் கொடுப்பதற்காக அமர்ந்திருக்கிறார். அவரை நேர்காணல் செய்பவராக வந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் ‘நடிகர் சூர்யா’வாகவே வரும் சூர்யா. இந்த நேர்காணலில் நம்பி தனது வாழ்நாள் சாதனைகளையும், பின்னர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், தன் தரப்பு நியாயங்களையும் உணர்ச்சிகரமான ஃபிளாஷ்பேக் காட்சிகள் மூலம் விவரிப்பதாக மீதிப்படம் முழுவதும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தன் விருப்பப் பாடத்தை கற்றுக்கொள்ள நம்பி சுவாரஸ்யமாக புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவது, 52 விஞ்ஞானிகளுடன் சென்று, ரகசியமாக பிரெஞ்சுக்காரர்களிடம் தொழில்நுட்ப அறிவைக் கற்று, அவர்களின் மூக்குக்குக் கீழே ’விகாஸ்’ எஞ்சினை உருவாக்கி சாதனை படைப்பது, கெடுதல் செய்ய முயலும் அமெரிக்கர்களுக்கு டிமிக்கி கொடுப்பது உள்ளிட்ட நம்பியின் பல அறிவியல் – தொழில்நுட்ப சாகசங்கள் முதலில் காட்டப்படுகின்றன.

படத்தின் இரண்டாம் பாதியில், நம்பி நாட்டின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ’தேசதுரோகி’  பட்டம் சூட்டப்பட்டு, சிறையில் சித்ரவதை செய்யப்படுவது காட்டப்படுகிறது. இதை பார்க்கும்போது, இந்தியாவில் தன்னலமற்ற விஞ்ஞானிக்கே இது தான் கதியா? என்ற ஆத்திரமும், ஆவேசமும் ஏற்படுகிறது.

பின்னர் சி.பி.ஐ கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அவரை நிரபராதி என விடுவிக்க, ஒன்றிய அரசு அவருக்கு கவுரவ விருதும், கேரள அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்டஈடும் கொடுத்து பரிகாரம் தேடிக்கொள்வதாய் படம் முடிகிறது.

நடிகர் மாதவன் இந்த படத்தில் நாயகனாக நடித்திருப்பதோடு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனராகவும் அறிமுகமாகியிருக்கிறார். நம்பி நாராயணனாகவே கேமரா முன் வாழ்ந்திருக்கும் அவர், புரிந்துகொள்வதற்கு கடினமான அறிவியல் – தொழில்நுட்ப விவரங்களை ஸ்கிரிப்ட்டில் எத்தனை எளிமையாகக் கொடுக்க முடியுமோ அத்தனை எளிமையாக கொடுத்திருக்கிறார். நம்பியின் வாழ்க்கைச் சம்பவங்களை மிக நெருக்கமாக அருகிலிருந்து பார்ப்பது போன்ற அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுத்திருக்கிறார். பாராட்டுகள். நேர்காணல் முடியும்போது அங்கே மாதவன் மறைந்து நிஜ நம்பி நாராயணன் கலங்கிய கண்களுடன் அமர்ந்திருப்பதை காட்டி மெய்சிலிர்க்க வைத்த இயக்குனரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

ராக்கெட் துறையை ஆக்கிரமித்திருக்கும் வல்லரசு நாடுகள் மற்றும் அவற்றின் ஏஜெண்டுகளாக இருக்கும் உள்நாட்டு ’கருப்பு ஆடுகள்’ இவற்றுக்கும் நம்பி நாராயணனுக்கு எதிரான பொய்க்குற்றச்சாட்டும் உள்ள தொடர்பை இயக்குனர் துணிந்து தோலுரித்துக் காட்டியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

0a1d

மாதவனுக்கு அடுத்தபடியாக மனதில் நிற்பவர் நம்பியின் மனைவி மீனா கதாபாத்திரத்தில் வரும் சிம்ரன். பெரும்பாலான படங்களில் கதாநாயகி வந்து போவதைப் போல இதில் சிம்ரன் வந்து போவார் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். அவரது கதாபாத்திரம் வலிமையானது. அதற்கு தேவையான சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார் சிம்ரன்.

நம்பியுடனான நேர்காணலில் பார்வையாளர்களின் மனச்சாட்சியாக இருந்து உரையாடும், உணர்ச்சி வசப்படும் சூர்யா, தனது கதாபாத்திரத்தின் நோக்கத்தை நேர்த்தியாக நிறைவு செய்திருக்கிறார்.

விக்ரம் சாரா பாயாக ரவி ராகவேந்திரா, அப்துல் கலாமாக குல்ஷன் குரோவர், சி.பி.ஐ அதிகாரியாக கார்த்திக் குமார் என அனைவரும் தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை யதார்த்தமாக செய்திருக்கிறார்கள்.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.

 ‘ராக்கெட்ரி’ – அவசியம் பார்க்க வேண்டிய காவியம்!