பணமழையில் ஆர்.கே.நகர்: இடைத் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்!
ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற 12ஆம் தேதி (புதன்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் நாளை (திங்கட்கிழமை) முடிவடைவதாக இருந்தது.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு பண பட்டுவாடா நடந்தது அம்பலமானது. அரசியல் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதமும், காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கியது தெரிய வந்தது. இரவு-பகலாக நடந்த தேர்தல் முறைகேட்டை தடுக்க முடியாமல் தேர்தல் ஆணைய அதிகாரிகள் திணறினர். இது குறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இதன் தொடர்ச்சியாக, சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றி வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகம், உறவினர் வீடுகள் என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு சுமார் ரூ.90கோடி வரை பணம் கொடுத்ததற்கு ஆதாரமான முக்கிய ஆவணங்களும், கட்டுக்கட்டாக ரொக்க பணமும் சிக்கின. இந்த ஆதாரங்களை எல்லாம் வருமான வரித்துறையினரிடம் இருந்து பெற்ற தேர்தல் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் டெல்லி சென்றனர். இன்று (ஞாயிறு) காலை 10 அணி அளவில் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு சென்ற அவர்கள் முதலில் தமிழக பொறுப்பை கவனிக்கும் துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹாவை சந்தித்து ஆர்.கே.நகர் தொகுதியின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கம் அளித்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்தும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்தும் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதன் பின்னர் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி ராஜேஷ் லக்கானியுடனும், விக்ரம் பத்ராவுடனும் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் இருவரும் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது தொடர்பாக கிடைத்த விவரங்களை அவரிடம் தெரிவித்தனர். இந்த ஆலோசனை கூட்டம் இரவு 7 மணி வரை நடந்தது.
இதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்தது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் சற்று நேரத்திற்குமுன் வெளியிட்டது.
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு மே மாதம் 16ஆந் தேதி தேர்தல் நடந்தபோது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணமும், பரிசு பொருட்களும் தாராளமாக வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டு, பின்னர் அந்த தொகுதிகளுக்கு நவம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதேபோல் இப்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.