ஆர்.கே.நகரில் 62 பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனைக்குப்பின் 70 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு க்டைசி நாளான இன்று சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வாபஸ் பெற்றனர். இதனை அடுத்து, இறுதியாக 62 பேர் தேர்தல் களத்தில் இருப்பதாக தேர்தல் அலுவலர் பிரவின் நாயர் தெரிவித்துள்ளார்.
சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன், ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன், தி.மு.க.சார்பில் மருது கணேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டு உதயம், தேமுதிக சார்பில் மதிவாணன், பாஜக. சார்பில் கங்கை அமரன் ஆகியோர் உட்பட 11 கட்சிகளின் வேட்பாளர்களும், ஜெ.தீபா உட்பட 51 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இருக்கிறார்கள்.
வேட்பாளர்களின் எண்ணிக்கை 64-ஐ தாண்டினால் மின்ன்ணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த இயலாது என்றும், வாக்குச்சீட்டு முறை கொண்டு வரப்படும் என்றும் கூறப்பட்டது. தற்போது 62 வேட்பாளர்களே போட்டி போடுவதால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தான் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.