ரிப்பப்பரி – விமர்சனம்
நடிப்பு: மாஸ்டர் மகேந்திரன், நோபிள் கே.ஜேம்ஸ், ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஸ்ரீனி, மாரி மற்றும் பலர்
இயக்கம்: நா.அருண் கார்த்திக்
ஒளிப்பதிவு: தளபதி ரத்தினம்
படத்தொகுப்பு: முகேன் வேல்
இசை: திவாகரா தியாகராஜன்
தயாரிப்பு: நா.அருண் கார்த்திக்
பத்திரிகை தொடர்பு: சதீஷ்குமார், சிவா (டீம் எய்ம்)
இது இளைஞர்களுக்கு உற்சாகமூட்டும் ஜாலியான திரைப்படம் என்பதால், இப்படத்துக்கு கமல்ஹாசனின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இடம்பெற்ற “புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா” என்ற பாடலில் வரும் உற்சாகமான வரியான “ரிப்பப்பரி”யைத் தலைப்பாக மிகப் பொருத்தமாக வைத்திருக்கிறார்கள்.
மூன்று இளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் ஹாரர் கலந்த காமெடி சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, வித்தியாசமான திரைக்கதையில், சுவாரஸ்யமான பல திருப்பங்களுடன் உருவாகியிருக்கிறது ‘ரிப்பப்பரி’ திரைப்படம்.
கோவை அருகே தலைக்கரை என்ற கிராமத்தில் நாயகன் மாஸ்டர் மகேந்திரன் தனது நண்பர்களுடன் இணைந்து, சமையலுக்கான யூடியூப் சேனல் ஒன்றை நடத்திக்கொண்டும், ஜாலியாக லூட்டி அடித்துக்கொண்டும் வாழ்ந்து வருகிறார். அந்த யூடியூப் சேனல் மூலம் ஒரு தீவிர ரசிகையின் அறிமுகம் கிடைக்க, முகம் தெரியாத அவரை காதலிக்கவும் ஆரம்பித்துவிடுகிறார் மாஸ்டர் மகேந்திரன்.
இதற்கிடையில், பக்கத்து ஊரில் யாராவது சாதி கடந்து காதல் திருமணம் செய்தாலோ, அல்லது ஓடிப் போனாலோ, அந்தக் காதலர்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். இதுபோல் மாஸ்டர் மகேந்திரனின் நெருங்கிய நண்பனும் கொல்லப்பட, அது பற்றி விசாரிக்கும்போது, அது சாதிவெறி பிடித்த பேயின் வேலை என்பது தெரிய வருகிறது.
அந்த கொலைகளைத் துப்பறியும் போலீஸ் இன்ஸ்பெக்டர், மகேந்திரனையும் அவரது நண்பர்களையும் அணுகி, அந்த பேய் பற்றிய உண்மையைக் கண்டறியும் வேலையை அவர்களிடம் கொடுக்கிறார்.
மகேந்திரனின் காதலியின் ஊரும் அந்த பேய் இருக்கும் ஊரும் ஒன்று என்பதால், அதற்காகவே அந்தப் பணியை ஏற்றுக் கொள்கிறார் மாஸ்டர் மகேந்திரன். அங்கே போனபிறகு தான் தெரிகிறது அந்த பேயின் ஹிட்லிஸ்டில் அடுத்து இருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன் என்பது.
யார் அந்த பேய்? அதன் பின்னணி என்ன? அது பற்றிய உண்மையை மாஸ்டர் மகேந்திரன் & கோ கண்டுபிடித்ததா? அதன் ஹிட்லிஸ்டில் இருக்கும் மாஸ்டர் மகேந்திரன் உயிர் தப்பினாரா? அவரது காதல் என்ன ஆனது? கடைசியில் அந்த பேய் என்ன ஆனது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது, ஜாலியான ‘ரிப்பப்பரி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், கிராமத்து இளைஞனாக இளமையோடும், துடிப்போடும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நண்பர்களோடு சேர்ந்து சொந்த ஊருக்குள் அவர் யூடியூப் நடத்தும் லட்சணத்தையும், அவர் செய்யும் சில அலப்பறைகளையும், சம்பந்தமே இல்லாத விவகாரத்தில் தலையிட்டு ஆபத்தில் சிக்கிக்கொள்வதையும் ரசிக்க முடிகிறது. விஜய் போலவே சில இடங்களில் மேனரிசம் செய்து, விஜய் பாடிய ஒரு பாடலையும் பாடி, ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார்.
மாஸ்டர் மகேந்திரனின் காதலியாக வரும் ஆரத்தி பொடி, டூயட் மற்றும் சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். அவரை ஒருதலையாய் காதலிப்பவனின் பேச்சும், செயலும் சிரிக்க வைக்கிறது.
இன்னொரு கதாநாயகியாக வரும் காவ்யா அறிவுமணிக்கு அழகான முகம். கதையில் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம். அதை புரிந்துகொண்டு அவர் அளவான நடிப்பை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கும் ஸ்ரீனிக்குமான காதலும், காதல் காட்சிகளும் அழகு.
முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீனி, வித்தியாசமான வேடத்தில் மிரட்டியிருக்கிறார். நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் நோபிள் கே.ஜேம்ஸ், மாரி ஆகிய இருவரும் படம் முழுவதும் வந்து பல காட்சிகளில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள்.
கதை எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் நா.அருண் கார்த்திக், காமெடி கலந்த திகில் கதையை தனக்கே உரித்தான பாணியில் கமர்ஷியலாகவும் சுவாரஸ்யமாகவும் இயக்கியிருக்கிறார். படத்தில் காட்டப்படும் பேயும், அதை வடிவமைத்த விதமும் புதிதாக இருப்பதோடு, ரசிக்கவும் வைக்கிறது. சாதிபேதம் என்ற முக்கியமான சமூகப் பிரச்சனையை படத்தின் மையக்கருவாக கையில் எடுத்திருக்கும் இயக்குநர் நா.அருண் கார்த்திக், அதை நியாயமான முறையில் கையாண்டிருக்கிறார். பாராட்டுகள்.
தளபதி ரத்தினத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி விருந்து. திவாகரா தியாகராஜனின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.
‘ரிப்பப்பரி’ – லாஜிக் இல்லா ஹாரர் காமெடி மேஜிக்! ரசிக்கலாம்!!