புரட்சி பாடகர் கத்தார் காலமானார்: அரசு மரியாதையுடன் உடல் தகனம்

தெலுங்கானா மாநில புரட்சி பாடகர் கத்தார் (76) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று ஹைதராபாத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மக்கள் பாடகர், புரட்சி பாடகர், எழுச்சி கவிஞர் என்றெல்லாம் மக்களால் புகழப்பட்டவர் கும்மடி விட்டல் ராவ் என்கிற கத்தார் (76). நுரையீரல் பிரச்சினையால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் காலமானார்.

இவரது மறைவு செய்தி அறிந்து, தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் மருத்துவமனையில் இருந்து கத்தாரின் உடல் ஹைதராபாத் எல்.பி. ஸ்டேடியத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

தெலுங்கானா, ஆந்திர மாநில அமைச்சர்கள், அரசியல், திரைத்துறை பிரபலங்கள், கவிஞர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர், நேற்று மதியம் சுமார் 2 மணிக்கு இவரது உடல், அல்வாலில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், கத்தாரின் மஹாபோதி பள்ளி வளாகத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.