கண்ணீர் சிந்தாதே! கலகம் செய்!!
“இந்தத் தருணத்தில் நான் புண்பட்டவனாக உணரவில்லை. என் மனம் துயரில் மூழ்கவில்லை. வெறுமையானவனாக, என்னைப் பற்றியே அக்கறையற்றவனாக உணர்கிறேன். இது பரிதாபத்துக்குரிய நிலைதான். அதனால்தான் இதைச் செய்கிறேன். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். இவ்வுலகில் வாழ்வதைவிடச் சாவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.”
– இவை ரோகித் வெமுலாவின் இறுதிக் கடிதத்தில் காணப்படும் வரிகள்.
தன்னைச் சுற்றியிருந்த மாணவர்களைச் செயல் துடிப்புள்ளவர்களாக மாற்றிய ஒரு இளைஞனை வெறுமையில் தள்ளியது எது? பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் தற்போது தான் வாழ்கின்ற சமூகம் வரையிலான அனைத்தின் மீதும் மாளாக்காதலுடன் அக்கறையும் கொண்டிருந்த ஒரு இளைஞனை, தன் மீதே அக்கறையற்ற பரிதாப நிலைக்குத் தள்ளியது எது?
யாகுப் மேமனின் மரண தண்டனையைச் சகித்துக்கொள்ள முடியாமல் துடித்த ஒரு மாணவன், முசாஃபர் நகர் படுகொலைகளைத் தனது கண்முன் நடைபெற்ற அநீதி போல் உணர்ந்த மாணவன், ‘வாழ்வதை விடச் சாவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக’ கூறுகிறானே, அதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்ன?
வெமுலாவின் கடிதம் இச்மூகத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது. தனது மரணம் ஒரு எதிர்ப்பலையை உருவாக்க வேண்டுமென்ற விருப்பம்கூட வெமுலாவின் கடிதத்தில் தென்படவில்லை. இதுதான் நம்மைக் குற்றவுணர்வில் ஆழ்த்தும் பழி. தனது முடிவுக்காக, தன்னை நேசித்தவர்களிடம் வெமுலா மன்னிப்புக் கேட்கிறான். ஆனால், தனது மரணம் மற்றவர்களிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தி விடாது என்ற “தெளிவு” வெமுலாவிடம் இருந்திருக்கிறது.
இறந்துபோன எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகளோ, “இந்தக் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில்தான் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாக” கடிதத்தின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது அவர்கள் எழுதிய தற்கொலைக் கடிதம் என்பது உண்மையாயின், அம்மாணவிகளின் எதிர்பார்ப்பு வெமுலாவின் மொழியில் கூறுவதெனில், மிகவும் பரிதாபத்துக்குரியது. கல்லூரியின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெற்றவர்களென அம்மாணவிகள் நம்புகின்ற எல்லா நிறுவனங்களும் நிர்வாகத்தின் குற்றக்கூட்டாளிகளே என்பது புரியாத காரணத்தினால் வந்த வெகுளித்தனமான எதிர்பார்ப்பு.
இந்த அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகள், இந்த அரசமைப்பு உருவாக்கியுள்ள விதிமுறைகள், மரபுகள், தான் நிலைநிறுத்த விரும்புவதாக ஆளும் வர்க்கமே கூறிக்கொள்கின்ற சமூக பண்பாட்டு விழுமியங்கள், ஆளும் வர்க்கம் பீற்றுகின்ற சட்டத்தின் ஆட்சி ஆகிய இவையனைத்துமே தோற்றுவிட்டன என்பதை உணர்ந்து கொள்ளாமல், அவற்றின் வரம்பில் நின்று ஏதேனும் சாதித்துவிட முடியும் என்று நம்புகிறவர்கள், தத்தம் சூழ்நிலைகள் தோற்றுவிக்கும் நிர்பந்தங்களுக்கு ஏற்ப தற்கொலை மனோபாவத்துக்கு ஆட்படுகிறார்கள். விஷ்ணுப்பிரியா முதல் வெமுலா வரையிலான மதிப்பு மிக்க பல உயிர்களை இப்படித்தான் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.
தற்கொலை மனோபாவத்திலிருந்து இளைஞர்களை விடுவிக்க வல்லதும் இத்தகைய கலகப் பண்பாடுதான்!
நன்றி: வினவு டாட்காம்