தெலங்கானா: புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்
தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ரேவந்த் ரெட்டி அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும், சபாநாயகர், துணை முதல்வர், அமைச்சர்கள் என மேலும் 11 பேர் பதவி ஏற்றார்கள். பிரம்மாண்டமாக நடந்த இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,மற்றும் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள119 தொகுதிகளில் 65 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி தனி பெரும்பான்மை பெற்றது. இதனை தொடர்ந்து யார் முதல்வராக பதவி ஏற்பது எனும் பிரச்சினை தலைதூக்கியது. தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவராக, திறன்பட செயல்பட்டு, கட்சியை அம்மாநிலத்தில் அரியணையில் ஏற்ற அரும்பாடு பட்ட ரேவந்த் ரெட்டியை முதல்வராக நியமனம் செய்வது எனும் ஒருமித்த கருத்தோடு, ரேவந்த் ரெட்டியின் பெயர் கடந்த செவ்வாய் கிழமை இரவு அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் ஸ்டேடியத்தில், புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பதவியேற்பு விழா நேற்று பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவுக்கு டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ்ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், மூத்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், 64 எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
நேற்று மதியம் சரியாக 1.04 மணிக்கு தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது முதல்வராக பதவியேற்ற ரேவந்த் ரெட்டி,கடவுள் மீது ஆணையாக, என பிரமாணம் செய்தார். இவரை தொடர்ந்து, துணை முதல்வராக பட்டி விக்ரமார்க்கா மற்றும் தாமோதர ராஜநரசிம்மா, கோமிட்டி ரெட்டி வெங்கட் ரெட்டி, தர் பாபு, நிவாஸ் ரெட்டி, பொன்னம் பிரபாகர், கொண்டா சுரேகா, சீதக்கா, தும்மல நாகேஸ்வர ராவ், ஜூபல்லி கிருஷ்ணா ராவ் ஆகிய 10 பேர் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டனர். இதில் தர்பாபு சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரேவந்த் ரெட்டி பதவி பிரமாணம் செய்து கொண்டதும், முதலில், தேர்தலில் காங்கிரஸ் அளித்த முக்கிய 6 வாக்குறுதிகளுக்கான கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி, பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 மாதஉதவி தொகை, மாநிலம் முழுவதும்பெண்களுக்கு இலவச பஸ் பயணம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ. 16,000 முதலீட்டு நிதி உதவி, ரூ. 500-க்குசமையல் கேஸ் சிலிண்டர், ஏழைகளுக்கு ரூ. 10 லட்சம் வரை ராஜீவ்ஆரோக்கிய திட்டத்தில் இலவச மருத்துவ சேவை போன்ற திட்டங்களுக்கான கோப்பில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கையெழுத்திட்டார்.
ஸ்டாலின் வாழ்த்து:
தெலங்கானாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற ரேவந்த் ரெட்டிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ”தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் நடந்த தொலைபேசி உரையாடலில் அவருக்கு என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன். முதல்வராக அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்து நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வாழ்த்துகிறேன்” என்றார்