டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஏராளமான கிராம சபைகள் தீர்மானம்: அதிகாரிகள் திணறல்!
தொழிலாளர் தினத்தன்று நடந்த கிராம சபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை நிராகரிப்பது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்டிப்பான வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், தமிழகத்தில் முதல்முறையாக கிராம சபைக் கூட்டங்களில் இளைஞர்கள், பெண்கள் அதிகளவு கலந்துகொண்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து, மதுக்கடைகளை அகற்றுவது உள்ளிட்ட தங்களது கிராமம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து தீர்மானங்களை நிறைவேற்றினர்.
தமிழகத்தில் சமீபகாலமாக பஞ்சாயத்து ராஜ்ஜியம் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் உயிர் பெறத் தொடங்கியிருக்கிறது. கடந்த தொழிலாளர் தினம் அன்று நடத்த வேண்டிய கிராம சபைக் கூட்டத்துக்கு அரசு சார்பில் ஒரு வாரம் முன்னதாகவே தண்டோரா அடிப்பது, நோட்டீஸ் ஒட்டுவது, வீடு வீடாக சென்று அழைப்பு விடுப்பது என செய்ய வேண்டிய நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளாட்சிகளின் ஆய்வாளர்களான மாவட்ட ஆட்சியர்களும் இது குறித்து அக்கறை காட்டவில்லை. மாறாக, அனைத்து மாவட்டங்களிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ‘மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்ற விடக் கூடாது’ என்று கண்டிப்பான வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தாம்பரம் அருகே காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் 39 ஊராட்சிகளில் பல்வேறு ஊராட்சிகளில் மக்கள் வசிப்பிடங்களில் ஏராளமான மதுக்கடைகள் இயங்குகின்றன. அவற்றை அகற்றக் கோரி மக்கள் அடிக்கடி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த மே 1-ம் தேதி கிராம சபைக் கூட்டத்தில் மதுக்கடையை அகற்றும் தீர்மானத்தை நிறைவேற்ற அனைத்து பஞ்சாயத்து செயலாளர்களும் மறுத்துவிட்டனர். ஆனால், முன்மாதிரி கிராமமான முடிச்சூர் ஊராட்சியில் மக்கள் கடுமையாக போராடியதால் மதுக் கடையை அகற்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், ஆலத்தூர் கிராம பஞ்சாயத்தில் கடந்த ஆறு மாதங்களில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று கிராம இளைஞர்கள், பஞ்சாயத்து செயலாளரிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து கடந்த நிதியாண்டின் கணக்கு புத்தகத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றார்கள். இதனை எதிர்பார்க்காத பஞ்சாயத்து செயலாளர் தன்னிடம் கணக்குப் புத்தகம் இல்லை என்றார். ஆனால், கணக்குகளை ஒப்படைக்கா விட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று இளைஞர்கள் தெரிவிக்கவே உயரதிகாரிகளுடன் ஆலோசித்து, கணக்கு புத்தகத்தை மக்களிடம் அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம், வாவிபாளையம் கிராம பஞ்சாயத்தில் காலை 10 மணிக்கு மக்கள் கிராம சபையைக் கூட்டினார்கள். ஆனால், அதிகாரிகள் தரப்பில் இருந்து ஒருவரும் வரவில்லை. பஞ்சாயத்து செயலாளர் மட்டுமே வந்திருந்தார். அங்கு மதுக்கடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றபோது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார். மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்ற பிறகு மதியத்துக்கு மேல் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் வந்தார். பிறகு பஞ்சாயத்து புத்தகத்தில் அதிகாரபூர்வமாக மதுக்கடையை அகற்றும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியம், மலுமிச்சாம்பட்டி கிராம பஞ்சாயத்தில் இயங்கி வரும் மதுக்கடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தில் பெண்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் அதிகளவு பங்கு எடுக்காததால் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்று மறுத்துவிட்டார்கள்.
புவி வெப்பமயமாதல் விவாதம்
திருவாரூர் மாவட்டத்தில் எடக்கீழையூர் ஊராட்சியில் மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிராமத்தில் இருக்கும் மதுக்கடையை அகற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் ஆதனங்குறிச்சி கிராமத்தில் அங்கு இருக்கும் சுண்ணாம்புக் கல் கழுவும் ஆலையை மூட வேண்டும் என்றும் காலாவதியான சிமென்ட் ஆலைகளை மூட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெடுவாசல் கிழக்கு கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகை மாவட்டம், திருக்கடையூர் கிராம சபைக் கூட்டத்தில் உலக வெப்பமயமாதல் குறித்தும் அதில் தங்கள் கிராமத்தின் பங்கு என்ன என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து தங்கள் கிராமத்தில் பசுமையை அதிகரிக்க விதைப்பந்துகள் மூலம் மரம் வளர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிராம பஞ்சாயத்தில் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் கிராமத்தின் இளைஞர்கள் தாமாக முன்வந்து மக்களைக் கிராம சபைக் கூட்டத்துக்கு அழைத்தனர். மக்கள் திரளாக கலந்துக்கொண்ட அந்தக் கூட்டத்தில் இராமநத்தத்தில் மதுக்கடைகளைத் திறக்க கூடாது, கிராமத்தின் பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்க வேண்டும், நீர் நிலைகளை தூர் வார வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கிராம பஞ்சாயத்து, விழுப்புரம் மாவட்டம் ஆவணிப்பூர் கிராம பஞ்சாயத்து , குழுமூர் கிராம பஞ்சாயத்து ஆகிய இடங்களில் அதிகாரிகள் யாரும் வராத நிலையிலும் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முயற்சியால் கிராம சபைக் கூட்டங்கள் நடந்தன.
கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் மறுக்க முடியுமா என்பது குறித்து உள்ளாட்சிகள் ஆய்வாளரும் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பிரிவு தலைவருமான பேராசிரியர் பழனிதுரையிடம் கேட்டோம். “சட்டப்படி எந்த அதிகாரியும் அவ்வாறு மறுக்க இயலாது. தங்கள் கிராமத்துக்கு என்ன தேவை? என்ன தேவையில்லை என்று தீர்மானிக்கும் சட்டப்பூர்வமான உரிமை அந்த கிராமத்தின் வாக்காளர்களுக்கு மட்டுமே இருக்கிறது. தவிர, கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற மக்கள் யாருடைய அனுமதியையும் பெறத் தேவையும் கிடையாது. மக்களின் அறியாமை காரணமாகவே அதிகாரிகள் பல இடங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதைத் தடுத்துள்ளனர். இது குறித்து வழக்கு தொடர்ந்தால் மாவட்ட ஆட்சியர் வரை நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஆனாலும் இப்போதும் பிரச்சினை ஒன்றுமில்லை, தடுக்கப்பட்ட இடங்களில் அடுத்த மாதமே மக்கள் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்” என்றார்.
தமிழகத்தில் ஏராளமான கிராமங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கும் பட்சத்தில் நீதிமன்றங்களை நாடி மதுக்கடைகளை அகற்ற கிராம மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
டி.எல்.சஞ்சீவிகுமார்
Courtesy: tamil.thehindu.com