“போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும்”: சல்லிக்கட்டு அமைப்பு தலைவர்கள் பேட்டி!
போராட்டத்தை இப்போதே கைவிட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மறுபடியும் மார்ச் 31ஆம் தேதிக்கு மேல் போராடிக் கொள்ளலாம் என்றும் ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகளான ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், காங்கேயம் காளை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, வழக்கறிஞர் அம்பலத்தரசு, இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, வீர விளையாட்டு மீட்புக் கழகத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் இன்று இரவு கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.
”ஜல்லிக்கட்டு போராட்டத்தில் 90% வெற்றியை நோக்கி பயணித்து விட்டோம். ஜல்லிக்கட்டு நடைபெறும்போது பல கிராமங்களில் பாதுகாப்பு வளையங்களுக்கான செலவை ஏற்க முடியவில்லை. மாணவர்கள், இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு வளையங்களுக்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும். இதை கோரிக்கையாக முன்வைக்கிறோம் என்றார் ராஜசேகரன்.
“டெல்லி சென்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்தோம். அவருடன் சென்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து ஒரு விண்ணப்பம் வைத்தோம். ‘பீட்டாவை விசாரிக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து பணம் வருவதை பெற்றுக்கொண்டு, இந்திய நாட்டில் இருக்கும் காளைகளை அழிக்கும் முயற்சியில் பீட்டா செயல்படுகிறது என்று கூறினோம்.
உள்துறை அமைச்சர் அது குறித்து புகார் கொடுக்க கூறியிருந்தார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் மேற்கொள்ளலாம்.
இந்தநிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தை மார்ச் 31-ம் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம். இன்று இப்போது போராட்டத்தை தொடர்ந்துகொண்டிருப்பது மாணவர்கள், இளைஞர்களுக்கு சிரமம்தான். அதனால் போராட்டத்தை தள்ளிவைக்க வேண்டுகிறோம்.
2 மாதங்கள் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். தடை நிரந்தரமாக நீங்கவில்லை என்றால் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் போராடலாம்.
அலங்காநல்லூரில் மட்டும் காவல்துறை அனுமதியின் பேரில் போராட்டம் நடத்தினோம். மெரினா, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் இளைஞர்கள் தன்னெழுச்சியாகத் தான் போராடினார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு யாரும் தலைவர் இல்லை. அதனால் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூற எங்களுக்கு அதிகாரம் இல்லை. எனவே, போராட்டத்தை தள்ளிவைக்க வேண்டுகிறோம்” என்றார் கார்த்திகேய சிவசேனாதிபதி.
”ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். ஆனால், ஒரு படத்தைப் போட்டு கட்சியைத் திட்டியோ, பிரதமரைத் திட்டியோ வாசகங்கள் வருகின்றன. அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட முடியாது. இந்தப் போராட்டம் தற்போது வெற்றி பெற்று விட்டதால் அதிலிருந்து விலகுகிறேன்” என்றார் ஹிப் ஹாப் ஆதி.