‘ஜியோ 4ஜி’: இந்திய தொலைதொடர்பு துறையை கைப்பற்ற ரிலையன்ஸ் அதிரடி!

இந்தியாவில் நாளுக்கு நாள் மிக வேகமாக தொலைதொடர்பு துறை வளர்ந்து வருகிறது. குறிப்பாக இணைய சேவை பயன்பாடு என்பது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. அதனை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்யும் வகையில் மிகப் பெரிய திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் “ஜியோ 4ஜி” என்ற பெயரில் அறிவித்திருக்கிறது. இதனால் பிஎஸ்என்எல் மற்றும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என தெரிகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ‘ஜியோ 4ஜி’ மொபைல் சேவை குறித்த முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, குறைந்த நேரத்தில் வாடிக்கையாளர்களை எட்டுவதே நோக்கம் என்றும், மேலும் இந்தியாவின் 18,000 நகரங்கள், 2 லட்சம் கிராமங்கள் என 90 சதவித மக்களை (1.25 பில்லியன்) மார்ச் 2017க்குள் சென்றடைவதே ரிலையன்ஸ் ஜியோவின் குறிக்கோள் என்றும் அறிவித்தார். மேலும் ஜியோவை பயன்படுத்துபவர்களுக்கு நாடு முழுவதும் இலவச மொபைல் அழைப்புகள், ரோமிங் கட்டணம் ரத்து, 1 ஜிபி பயன்பாட்டுக்கு ரூ. 50 கட்டணம் , மாணவர்களுக்கு கூடுதலாக 25 சதவித இணைய பயன்பாடு இலவசம், முதல் 4 மாதங்களுக்கு மட்டும் இலவச இணைய பயன்பாடு, ரூ.19-ல் இருந்து மொபைல் திட்டங்கள், குறைவாக பயன்படுத்துவோருக்கு அடிப்படை திட்டம் மாதத்துக்கு ரூ. 149, அதிக அளவு இணையம் உபயோகிப்போருக்கு மாதத்துக்கு ரூ. 4,999 வரை என பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஏற்கனவே ஊடகங்கள் காட்டிய வேகத்தில் ரிலையன்ஸ் கடைகள் முன்பு ஜியோ சிம்கார்டுகள் வாங்க பலரும் வரிசையில் நின்று டோக்கன்களை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் இந்த திட்டம் முழுமையாக வந்த பின்னர்தான், இதன் பின்னணியில் இருக்கும் சூட்சமம் புரியும். இந்த ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டும் மோடி அரசு எதன் அடிப்படையில் முன்நிறுத்துகின்றது என்பதும் தெரியவரும்.
Courtesy: theekkathir.in