REKKA – Tamil Review

“விஜய் சேதுபதி இன்னின்ன மாதிரி கதையம்சம் கொண்ட படங்களில், இன்னின்ன மாதிரி கதாபாத்திரங்களில் தான் நடிப்பார்” என்று யாரும் தன்னை ஒரு வட்டத்துக்குள் அடைத்துவிடக் கூடாது என்ற அச்சத்தில், அவர் நடித்திருக்கும் மற்றுமொரு கமர்ஷியல் மாஸ் மசாலா படம் ‘றெக்க’.

தாதா கபீர் சிங் ஆட்கள் மற்றொரு தாதாவான ஹரிஷ் உத்தமனின் தம்பியை கொன்றுவிடுகிறார்கள்.  இதனால் கோபமடைந்த ஹரிஷ் உத்தமன், கபீர் சிங்கை பழிவாங்க நேரம் பார்த்து காத்திருக்கிறார்.

இதன்பிறகு கதை 6 மாதத்திற்கு பின்னோக்கி நகர்கிறது.

காதலர்களை சேர்த்து வைப்பதை தனது லட்சியமாக கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, ஒருமுறை ஹரிஷ் உத்தமனுக்கு நிச்சயமான பெண்ணுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அந்த பெண்ணை தூக்கிச் சென்றுவிடுகிறார். இதனால், ஹரிஷ் உத்தமன், விஜய் சேதுபதி மீது கோபத்தில் இருக்கிறார். அவரை சமயம் பார்த்து பழிவாங்க நினைக்கிறார்.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அப்போது, டாஸ்மாக்கில் ஹரிஷ் உத்தமன் ஆட்களிடம் பிரச்சினையில் ஈடுபடுகிறார் விஜய் சேதுபதியின் நண்பர் சதிஷ். இந்த பிரச்சினை ஹரிஷ் உத்தமனிடம் செல்கிறது. நண்பனை மீட்பதற்காக வரும் விஜய் சேதுபதியிடம் ஹரிஷ் உத்தமன், மதுரையில் பெரிய அரசியல்வாதியின் பெண்ணான லட்சுமி மேனனை தூக்கச் சொல்கிறார். அப்படி அந்த வேலையை செய்யாவிட்டால், தங்கையின் திருமணத்தில் பிரச்சினை செய்வதாக கூறுகிறார். அதேநேரத்தில் லட்சுமி மேனன், கபீர் சிங்கை திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருப்பார்.

தங்கையின் திருமணத்தில் பிரச்சினை ஏற்படுவதை விரும்பாத விஜய் சேதுபதி, ஹரிஷ் உத்தமன் சொன்ன வேலையை செய்ய முடிவெடுக்கிறார். தனது திருமணத்தை நிறுத்திய விஜய் சேதுபதி இந்த வேலையை செய்தால், ஒன்று, அரசியல்வாதியிடம் மாட்டிக் கொண்டு இறந்துபோவார். அதேநேரத்தில், வேலையை சரியாக செய்தால், தனது தம்பியைக் கொன்ற கபீர் சிங்கை பழி வாங்கியதாக இருக்கும் என்று முடிவெடுத்துதான் இந்த வேலையை விஜய்சேதுபதியிடம் ஒப்படைத்திருப்பார் ஹரிஷ் உத்தமன்.

இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க ஆசைப்படும் ஹரிஷ் உத்தமனின் திட்டம் தெரியாமல் மதுரைக்கு செல்கிறார் விஜய் சேதுபதி. அங்கிருந்து லட்சுமி மேனனை தூக்கிக் கொண்டு வந்து ஹரிஷ் உத்தமனிடம் ஒப்படைத்து, தனது தங்கை திருமணத்தை நடத்தினாரா? அல்லது பிரச்சினை திசைதிரும்பியதா? என்பதே மீதிக்கதை.

’சேதுபதி’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடித்திருக்கும் மற்றொரு மாஸ் படம் இது. இப்படத்தில் ஆக்ஷனில் விஜய் சேதுபதி அதிரடி காட்டியிருக்கிறார். மாஸ் ஹீரோக்களுக்கு சவால்விடும்படியான காட்சிகளில் அசால்ட்டாக நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.  லட்சுமி மேனனுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள், வசனங்கள் உச்சரிப்பு என அனைத்திலும் தனக்கே உரித்தான எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

லட்சுமி மேனன் இப்படத்தில் சற்று எடை கூடியிருக்கிறார். அவருடைய மேக்கப்பும் அதிகமாக இருக்கிறது. இதையெல்லாம் கொஞ்சம் குறைத்திருந்தால் ரசித்திருக்கலாம். படத்தின் முதல் பாதியில் இவருடைய நடிப்பு செயற்கைத்தனமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் அதற்கான காரணத்தை சொல்லி, அவரது நடிப்புக்கு விளக்கம் கொடுத்திருப்பதால் அந்த கதாபாத்திரத்தை ரசிக்க முடிகிறது.

விஜய் சேதுபதிக்கு அப்பாவாக வரும் கே.எஸ்.ரவிக்குமாரின் நடிப்பு பிரமாதம். மகனை புரிந்துகொண்ட தகப்பனாக அனைவர் மனதிலும் எளிதில் பதிகிறார். சதிஷின் காமெடி படத்தில் பெரிய அளவில் எடுபடவில்லை.

கிஷோருக்கு இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம். எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக்கூடிய கிஷோர், இந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். கிஷோரின் காதலியாகவும், ஆசிரியையாகவும் வருபவரும் அழகாக நடித்திருக்கிறார்.

’வேதாள’த்தில் வில்லத்தனத்தில் மிரட்டிய கபீர் சிங் இந்த படத்திலும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ஹரிஷ் உத்தமன் அமைதியான வில்லனாக வந்து அசத்தியிருக்கிறார்.

இயக்குனர் ரத்தின சிவா, விஜய் சேதுபதியை மாஸ் ஹீரோவாக காட்ட வேண்டும் என்பதற்காக அவருக்காகவே எழுதி, எடுத்த படமாக இது இருக்கிறது. படத்தில் நிறைய இடங்களில் விஜய் சேதுபதி பேசும் வசனங்கள், பஞ்ச் வசனங்களாக இல்லாவிட்டாலும் மாஸாக இருக்கிறது. கதை சரியாக இருந்தாலும் திரைக்கதை சற்று மெதுவாக நகர்கிறது.

டி.இமான் இசையில் “விர்று விர்று பாடல்” அடிக்கடி கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது. பின்னணி இசையில் இமான் அதிரடி கூட்டியிருக்கிறார். கே.எல்.பிரவினின் எடிட்டிங் காட்சிகளை துல்லியமாக வெட்டியிருக்கிறது. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக வந்திருக்கின்றன.

‘றெக்க’ – பறக்கும்!