விஜய்சேதுபதியின் ‘றெக்க’ – முன்னோட்டம்
‘தர்மதுரை’ வெற்றிப்படத்தை அடுத்து விஜய்சேதுபதி நடிப்பில் உலகெங்கும் வெளியாகும் படம் ‘றெக்க’. வருகிற 7ஆம் தேதி தமிழகத்தில் மட்டும் 300க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘றெக்க’யில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். இவர்களுடன் சதீஷ், ஹரிஷ் உத்தமன், கே.எஸ்.ரவிகுமார், கிஷோர், மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
தெரிந்து செய்யும் தவறுகள், தெரியாமல் செய்யும் தவறுகள் என தவறுகள் வேறுபடுகின்றன. தெரியாமல் செய்த தவறுகள் தான் வருத்தங்களை உண்டாக்கி விடுகின்றன. அந்த விதத்தில், கதாநாயகன் சிறு வயதில் தெரியாமல் செய்கிற தவறு, பின்வரும் நாட்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. பெரியவனாகி பக்குவம் வந்தபின் அந்த தவறை திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை கதாநாயகன் பயன்படுத்திக் கொண்டாரா? என்பதை ஆக்ஷன், நகைச்சுவை, காதல் என பக்கா கமர்ஷியல் அம்சங்களுடன் கலந்து சொல்வதே ‘றெக்க’.
காமன்மேன் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை ரத்தின சிவா எழுதி இயக்கியுள்ளார். தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படத்தை சிவபாலன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
காரைக்குடி, கும்பகோணம், மதுரை மற்றும் பாங்காங் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. டி.இமான் இசையமைப்பில் பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் முதல் கமர்ஷியல் படம் என்பதாலும், இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாலும் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘றெக்க’.