நிஜ சீவலப்பேரி பாண்டியின் வழக்கை நடத்தியவர் ரத்தினவேல் பாண்டியன்!

திமுக வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பதிவு:-

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, அன்புக்கும் மாட்சிமைக்கும் உரிய அண்ணாச்சி எஸ்.இரத்தினவேல் பாண்டியன் இன்று மறைந்துவிட்டார்.

இவர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் திருப்புடைமருதூர் எனும் ஊரில் பிறந்து, தம் பள்ளிப் படிப்பை அம்பாசமுத்திரத்திலும், கல்லூரிக் கல்வியை திருநெல்வேலி தூய சேவியர் கல்லூரியிலும் முடித்தார். 1954ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

திருநெல்வேலியில் கிரிமனல் வழக்குகளை நடத்தும் பிரபல வழக்கறிஞராக விளங்கினார். இவர் காலத்தில் சபாநாயகராக இருந்த செல்லப்பாண்டியன், என்.டி.வானமாமனலை, பாலாஜி போன்றவர்கள் கிரிமினல் வழக்கறிஞர்களாக அப்போது இருந்தனர்.

அக்காலத்தில், பிரபல திரைப்படமான ‘சீவலப்பேரி பாண்டி’யின் அசல் வழக்கை திருநெல்வேலியில் நடத்தியவர் இவரே.

தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, அம்பாசமுத்திரம் போன்ற பல துணை நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளை நடத்துவதுண்டு.

அப்போது ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தது. தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்படவில்லை.

இவரோடு ஜூனியர் வழக்கறிஞராக வைகோ இருந்தார். என்னை வைகோ தான் அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இவர் 1960களில் திருநெல்வேலி மாவட்டத்தில் சீனியர் வழக்கறிஞராக மட்டுமல்லாமல், நெல்லை மாவட்ட திமுக செயலாளராகவும் விளங்கினார்.

அப்போது இவருடைய வழக்கறிஞர் அலுவலகம் திருநெல்வேலி முருகன்குறிச்சியில் இருந்தது.

ஆரம்ப காலத்தில் இவர் ஒரு பியட் கார் வைத்திருந்தார். அந்த காரில் தான் அவர் கட்சிப் பணிகளுக்கு கிராமங்களுக்கு செல்வதுண்டு.

0a1c

வைகோ மீது இவருக்கு தனிப்பற்று உண்டு. தமிழ், ஆங்கிலத் திரைப்படங்களுக்கு செல்வதானால் வைகோவை அழைத்துக் கொண்டுதான் செல்வார்.

பேரவைத் தலைவராக இருந்த ஆவுடையப்பன் இவருடைய ஜுனியர், முன்னாள் சபாநாயகர் இவருடைய உறவினர்.

சேரன்மகாதேவி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோற்றபின், 1971ம் ஆண்டில் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்ந்தார்.

பின்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்தார். பின் 1988ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்று டெல்லிக்கும் சென்றார்.

மண்டல் கமிஷன் வழக்கிலும், கர்நாடக அரசை பிரிவு 356-ஐ கொண்டு கலைத்த எஸ்.ஆர்.பொம்மை வழக்கிலும் விசாரித்து முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர்.

இவர் வழங்கிய முக்கியத் தீர்ப்புகள் பல உண்டு. இவரது புதல்வர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி.

எளிமையாக, பகட்டில்லாமல் எந்த பதவியில் இருந்தாலும் வாழ்ந்து காட்டியவர். சட்டங்கள் ஒருபுறத்தில் இருந்தாலும் மனித நேயம், நாட்டின் நலன் என்பதையெல்லாம் மனதில் கொண்டுதான் இவருடைய தீர்ப்புகள் இருக்கும்.

மறைந்த என்னுடைய துணைவியாரை எனக்கு திருமணம் நிச்சயித்தது இவரும் பழ.நெடுமாறனும் தான். எப்படியெனில் என்னுடைய சகலை ஸ்ரீராமலுவும் இவரும் நண்பர்கள்.

சென்னை அண்ணாநகரில் ஆற்காடு வீராசாமி வீட்டின் பக்கத்தில் எனக்கு ஒரு வீடு உண்டு. அதை 1991இல் விற்கும்போது கடுமையாக ஆட்சேபித்து எனது வீட்டிற்கே வந்து, “ஏனய்யா இப்படி சொத்துகளை விற்கிறாய்?” என்று சண்டை போட்டுவிட்டு போனார்.

அப்படி தனிப்பட்ட வகையில் என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் பாசமும், நேசமும் கொண்டவர். இப்படி பல சம்பவங்கள் உண்டு.

தேர்தலில் தோற்றவர் !
மக்கள் மனங்களை வென்றார் !!
தோற்றவர் வென்றார்!

அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-02-2018