“ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் ஒரு இளையராஜாவை மிஞ்ச முடியாது!” –  பேரரசு

எம்.கே.பிலிம்ஸ் சார்பில் சி.முத்துகிருஷ்ணன் தயாரித்துள்ள படம் ‘ராணி’. சாய் தன்ஷிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை சமுத்திரகனியின் இணை இயக்குனர் எஸ். பாணி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில்  நடைபெற்றது. இதில் இளையராஜா, சாய் தன்ஷிகா, நடிகர் நமோ நாராயணன், இயக்குனர்கள் பேரரசு, கரு.பழனியப்பன், சமுத்திரகனி, மனோஜ்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன், பாணி, தயாரிப்பாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.

r7

விழாவில் இயக்குனர் பேரரசு பேசுகையில், “நான் வாழ்நாளில் இரண்டே இரண்டு பேரை பார்த்து தான் பொறாமைப்பட்டுள்ளேன் ஒருவர், என்னுடைய முன்னாள் காதலியின் கணவர். இன்னொருவர் இளையராஜா.

அந்த வகையில் இளையராஜாவின் இசையில் ‘ராணி’ படம் இயக்கியிருக்கும் இயக்குனர் பாணி மீது எனக்கு மிகப் பெரிய பொறமை உண்டு. நான் இளையராஜாவை கவரும் வகையில் ஒரு கதையை தயார் செய்து, நிச்சயம் அவருடைய இசையில் ஒரு படத்தை இயக்குவேன்.

நாம் எல்லோரும் பயணத்தின்போது கேட்கும் பாடல்கள் அனைத்தும் இளையராஜாவின் பாடல்கள் தான். அவருடைய பாடல்களை கேட்டுக்கொண்டே 2ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி கூட பயணிக்கலாம்.

இயக்குநர் பாணியின் பாணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மனதை கவரும் வகையில் உள்ளது. இப்படிப்பட்ட சிறந்த பாடல்களை இளையராஜாவால் தான் உருவாக்க முடியும்.

எனக்கு இளையராஜாவிடம் ஒரு கோரிக்கை. அவர் இது போன்ற பாடல்களை தான் உருவாக்க வேண்டும் என்பது தான் அது. கரு.பழனியப்பன் கூறியது போல் அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று பாடல்களை உருவாக்க வேண்டாம்.

உலகத்தில் ஒரே ஒரு இளையராஜா தான். ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் ஒரு இளையராஜாவை மிஞ்ச முடியாது என்பது தான் உண்மை” என்றார் இயக்குனர் பேரரசு.