“யுவன் ஷங்கர் ராஜா போல் இளையராஜா இசை அமைக்க வேண்டும்!” – கரு.பழனியப்பன்
எம்.கே.பிலிம்ஸ் சார்பில் சி.முத்துகிருஷ்ணன் தயாரித்துள்ள படம் ‘ராணி’. சாய் தன்ஷிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை சமுத்திரகனியின் இணை இயக்குனர் எஸ். பாணி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இளையராஜா, சாய் தன்ஷிகா, நடிகர் நமோ நாராயணன், இயக்குனர்கள் பேரரசு, கரு.பழனியப்பன், சமுத்திரகனி, மனோஜ்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன், பாணி, தயாரிப்பாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.
விழாவில் நாயகி சாய் தன்ஷிகா பேசுகையில், “ராணி’ திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் நான் நடித்திருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. நான் இப்படத்தில் நடிப்பதற்கு மிக முக்கியமான காரணம் இயக்குனர் சமுத்திரகனி தான். அவர் சொன்னதால் தான் நான் இப்படத்தில் நடித்தேன். என்னை அறிமுகபடுத்திய இயக்குநர் ஜனநாதன் முதல் ‘கபாலி’ இயக்குனர் பா.இரஞ்சித், ‘ராணி’ இயக்குனர் பாணி வரை அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசுகையில், “இப்படத்தின் கதை எனக்கு நன்றாக தெரியும். இது மிகச் சிறந்த கதை. இளையராஜா இசை மிக சிறப்பாக வந்துள்ளது. இயக்குனர் பாணி, தேனீ போல் உழைத்து இப்படத்தை சிறப்பாக உருவாகியுள்ளார். ‘கபாலி’ படத்துக்கு பின்னர் எல்லோருடைய கவனமும் தன்ஷிகா மீது தான். ‘ராணி’ படத்துக்குப் பின்னர் தன்ஷிகா மேலும் மிகப் பெரிய இடத்துக்கு செல்வார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்” என்றார்.
இயக்குனர் கரு.பழனியப்பன் பேசுகையில், “நான் யாரிடமும் இதுவரை கோரிக்கைகள் எதுவும் வைத்ததில்லை. ஏனென்றால் கோரிக்கைகள் வைத்தால் ஏதாவது பிரச்சனை வரும். அதனால் தான் கோரிக்கை வைப்பதில்லை. இப்போது முதன்முறையாக இளையராஜாவிடம் ஒரு கோரிக்கை வைக்கப் போகிறேன். அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று ஒரு படத்துக்கு முழுமையாக இசையமைக்க வேண்டும்.
ஏனென்றால், பல வருடங்களுக்குமுன் அவர் இசையமைத்த படங்களையே நாம் இன்று வரை கேட்கிறோம் அப்படி இருக்கும் போது அவர் இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு இசையமைக்கும்போது, அதை பல ஆண்டுகள் தாண்டி அனைவரும் ரசிப்பார்கள் என்பது உறுதி.
எனக்கு கார்த்திக் ராஜாவிடமும், யுவன் ஷங்கர் ராஜாவிடமும் இரண்டு கோரிக்கைகள் உண்டு. ஒன்று, இளையராஜா இதுவரை இசையமைத்த படங்களின் பட்டியலை உருவாக்க வேண்டும். மற்றொன்று, ஒட்டுமொத்த திரையுலகையும் ஒன்று திரட்டி அவருக்கு மிகப் பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த வேண்டும்.
இளையராஜாவுக்கு பாராட்டு விழா என்றால் ஒட்டுமொத்த ரசிகர்களும் கண்டிப்பாக அதை கொண்டாடி ரசிப்பார்கள். 40 வருடங்களாக சாதனை புரிந்துவரும் அவரை நிச்சயம் கொண்டாட வேண்டும். கண்டிப்பாக அவர் இதற்கும் மறுப்பு தெரிவிப்பார் நான் யுவனிடம் பேசிகொள்கிறேன்” என்றார் கரு,பழனியப்பன்.