ரங்கோலி – விமர்சனம்
நடிப்பு: ஹமரேஷ், பிரார்த்தனா சந்தீப், ஆடுகளம் முருகதாஸ், சாய்ஸ்ரீ பிரபாகரன், அக்ஷயா, அமித் பார்கவ் மற்றும் பலர்
இயக்கம்: வாலி மோகன் தாஸ்
ஒளிப்பதிவு: ஐ.மருதநாயகம்
படத்தொகுப்பு: சத்தியநாராயணன்
இசை: கே.எஸ்.சுந்தரமூர்த்தி
தயாரிப்பு: ஜி.சதீஷ் குமார் & கே.பாபு ரெட்டி
பத்திரிகை தொடர்பு: சதீஷ் (டீம் எய்ம்)
கல்வியின் பெயரால் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளுக்கு எதிராக, அரசுப் பள்ளிகள் பக்கம் பெற்றோர்களைத் திருப்பிவிடும் நல்ல படங்கள் தமிழில் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையைச் சேர்ந்தது தான் இந்த ‘ரங்கோலி’.
வடசென்னையில் சலவைத் தொழில் செய்யும் உத்தமர் காந்தி (ஆடுகளம் முருகதாஸ்) தன் மனைவி காளியம்மா (சாய்ஸ்ரீ பிரபாகரன்), மகள் வேம்பு லட்சுமி (அக்ஷயா) மற்றும் மகன் சத்யமூர்த்தி என்ற சத்யா (ஹமரேஷ்) ஆகியோருடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார். மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் தன் மகன் சத்யா தவறான சேர்க்கை காரணமாக ஒழுக்கங்கெட்டுப் போவதாகக் கூறி, மகனின் பிடிவாதத்தையும் மீறி, கடன் வாங்கி, ஒரு தனியார் பள்ளியில் சேர்க்கிறார் காந்தி.
விரும்பமின்றி அப்பள்ளிக்கு மாறும் சத்யாவை அங்குள்ள சில மாணவர்களும், ஆசிரியர்களும் ‘லோக்கல்’ என்றும், ‘கார்ப்பரேஷன் ஸ்கூல் பையன்’ என்றும் ஏளனம் செய்து ஒதுக்கி வைப்பதோடு, அடிக்கடி தொல்லையும் தருவதால் சத்யா மனமுடைந்து போகிறான். மேலும், தனியார் பள்ளியின் கட்டணக் கொள்ளை காரணமாக அதிக கடன் சுமையால் அவனது குடும்பமும் அனுதினமும் திண்டாடுகிறது.
ஒருகட்டத்தில், தன் வகுப்பில் பயிலும் மாணவி பார்வதி (பிரார்த்தனா சந்தீப்) மீது சத்யாவுக்கு கிரஷ் ஏற்படுகிறது. அந்த கிரஷ் அவனையும் அவன் குடும்பத்தையும் பல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கிறது. இறுதியில், பார்வதி மீது சத்யா கொண்ட ஈர்ப்பு என்ன ஆனது? அவனது சக வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் அவனை புரிந்துகொண்டார்களா? அவனது குடும்பத்தின் பொருளாதார சிக்கல் தீர்ந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு சமூகப் பொறுப்புணர்வுடன் விடை அளிக்கிறது ‘ரங்கோலி’.
திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகள்வழிப் பேரன், பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் மற்றும் நடிகர் உதயாவின் சகோதரி மகன் ஆகிய அடையாளங்களோடு இப்படத்தில் நாயகன் சத்தியமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஹமரேஷ். பிளஸ்-1 பயிலும் மாணவன் வேட்த்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார். பொருத்தமாக நடித்திருக்கிறார். மாநகராட்சிப்பள்ளியிலிருந்து பெற்றோர் விருப்பம் காரணமாகத் தனியார் பள்ளிக்குச் சென்று அங்கு சந்திக்கும் அவமானங்களை எதிர்கொள்ளும் காட்சிகளில் மிக இயல்பாக நடித்திருக்கிறார். ‘விளையும் பயிர் முளையில் தெரியும்’ என்பார்களே, அதுபோல எதிர்காலத்தில் ஒரு முன்னணி நாயக நடிகராக ஹமரேஷ் வருவார் என்பதற்கான அறிகுறிகள் இந்த படத்தில் தெரிகின்றன.
பள்ளி மாணவி பார்வதியாக நடித்திருக்கும் புதுமுகம் பிரார்த்தனா சந்தீப் கதாநாயகியாக – நாயகனின் கிரஷ்ஷாக – ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ரொம்ப குட்டியாக, சின்னஞ்சிறு சிறுமி போல் இருக்கிறார்.
நாயகனின் அப்பா உத்தமர் காந்தியாக வரும் ஆடுகளம் முருகதாஸ், அம்மா காளியம்மாவாக வரும் சாய்ஸ்ரீ பிரபாகரன், அக்கா வேம்பு லட்சுமியாக வரும் அக்ஷயா ஆகியோர் மாநகரத்தில் சலவைத் தொழில் செய்யும் எளிய குடும்பத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தங்கள் பொருளாதாரத் தகுதிக்கு மீறியதாக இருந்தாலும் தம் குழந்தைகளைத் தனியார் பள்ளியில் படிக்க வைத்துவிட வேண்டும் எனத் தவிக்கும் தற்காலப் பெற்றோர்களின் பிரதிநிதிகளாக வாழ்ந்திருக்கிறார்கள்.
நாயகனுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் தனியார் பள்ளி தமிழாசிரியர் ராவணனாக வரும் அமித் பார்கவ் தரமான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.
மாணவர்களாக வரும் சஞ்சய், ராகுல், விஷ்வா ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் வாலி மோகன்தாஸ், அனைத்தும் வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழலில் கல்வியும் வியாபாரப் பொருளாகிப் போனது குறித்து இப்படத்தினூடே பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும் மாநகராட்சிப் பள்ளியில் பயின்ற மாணவனுக்கு ஒரு தனியார் பள்ளியில் அதன் சூழலும் அதன் ஆசிரியர்களும் நிகழ்த்தும் கொடுமைகளின் தீவிரத்தை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். பாராட்டுகள்.
மருதநாயகத்தின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்து காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறது. இசையமைப்பாளர் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓ.கே ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது.
‘ரங்கோலி’ – பசுமை நிறைந்த பள்ளிப்பருவத்தை நினைவுகூரச் செய்யும் வண்ணக் கோலம்!