விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட ராமேசுவரம் புகைப்படம்!
தமிழ்நாட்டின் தெற்கு முனையான ராமேசுவரத்தை, விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து, விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி எடுத்த அழகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்க கடற்படையிலிருந்து ஓய்வு பெற்ற பொறியாளரான ஸ்காட் கெல்லி (வயது 51) விண்வெளி வீரராக, விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தியவர்.
ஸ்காட் கெல்லி கடந்த மார்ச் முதல் வாரத்திலிருந்து தொடர்ச்சியாக ஒரு வருட காலத்துக்கு ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கியுள்ளார். அவர் வருகிற மார்ச் மாதம் 3ஆம் தேதி தனது ஆய்வுகளை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்புகிறார்.
தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் ஸ்காட் கெல்லி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னார் வளைகுடா கடல், பாக்ஜலசந்தி கடல், பாம்பன் பாலம், ராமேசுவரம் தீவு, குருசடைத் தீவு, மண்டபம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கடல்வெளியை விண்வெளியிலிருந்து புகைப்படமாக எடுத்து, அப்படத்துக்கு “இந்தியாவின் தெற்கு முனையும் அதன் நீலக்கடலும்’ என்று தலைப்பிட்டுள்ளார்.
தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் வலைப்பக்கங்களில் கெல்லி பகிர்ந்துள்ள இந்த படம் தற்போது ஆயிரக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.