பாமக தலைமையை ஏற்க கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ராமதாஸ் அழைப்பு!
“தமிழகத்தில் மக்கள் ஆட்சி உருவாக்க திமுக, அதிமுக அல்லாத மற்ற கட்சிகள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையை ஏற்க வேண்டும். பாஜகவுக்கு அழைப்பு இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கிறோம்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியதாவது:
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போதே வருமான வரித் துறை சோதனை நடத்தியிருக்க வேண்டும்.
வருமான வரித் துறையினர் சோதனையில் கைப்பற்றியுள்ள ஆவணங்களை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும். இந்த சோதனையில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.
சசிகலா குடும்பத்தினரிடமிருந்து அனைத்து சொத்துகளையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும். சேகர்ரெட்டி, ராம் மோகன் ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது என்ன ஆனது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
ஆளுநர் ஆய்வு மாநில சுயாட்சியை பாதிக்கும். டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. தமிழகத்தில் 1.30 கோடி பேர் வேலையின்றி உள்ளனர். இது தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் மக்கள் ஆட்சி உருவாக்க திமுக, அதிமுக அல்லாத மற்ற கட்சிகள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையை ஏற்க வேண்டும். பாஜகவுக்கு அழைப்பு இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கிறோம்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.