“முழு மதுவிலக்குக்கு கால அட்டவணை வெளியிடுக!” –ராமதாஸ்
மதுவிலக்கு செயல்திட்டத்திற்கான கால அட்டவணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள ஜெயலலிதா 5 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முக்கியமாக தமிழகத்தில் மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்படும்; 500 சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும் என்பதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டிருக்கிறார். இது தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
ஆனால், இந்த நடவடிக்கை போதுமானது அல்ல.
தமிழகத்தின் மது விற்பனையில் 90% மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலான 5 மணி நேரத்தில் தான் நடைபெறுகிறது. காலையிலிருந்து மாலை வரை உழைத்து ஊதியம் பெற்று வீடு திரும்பும் தொழிலாளர்களும், அலுவலகத்திலிருந்து வீடு திரும்புபவர்களும் தங்கள் பணத்தை இந்த நேரத்தில் தான் மதுக்கடைகளில் இழக்கின்றனர்.
இதைக்கருத்தில் கொண்டு மது விற்பனை நேரத்தை காலையில் 2 மணி நேரம் குறைத்ததற்கு பதிலாக மாலையில் 2 மணி நேரம் குறைத்திருந்தால் அது ஓரளவாவது பயனுள்ளதாக இருந்திருக்கும். அதேபோல், விற்பனை நேரம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ள முதலல்வர் ஜெயலலிதா, 500 சில்லறை மதுக்கடைகள் எப்போது மூடப்படும் என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்காதது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது.
இதற்கெல்லாம் மேலாக படிப்படியாக மது விலக்கை ஏற்படுத்துவதற்கான வாக்குறுதி இந்த ஒற்றை நடவடிக்கையுடன் முற்று பெற்றுவிடக் கூடாது. தமிழகத்தில் சுமார் 7,000 மதுக்கடைகள் இருக்கும் நிலையில் ஆண்டுக்கு 500 மதுக்கடைகளை மூடினால் முழு மதுவிலக்கை ஏற்படுத்த இன்னும் 14 ஆண்டுகள் ஆகும். இது மிக நீண்ட அவகாசமாகும். முழு மதுவிலக்கு என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டு விட்ட நிலையில் மாதம் தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மதுக்கடைகளை மூடி இந்த ஆண்டு இறுதிக்குள் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் சமூகத்திற்கு பயனுள்ளதாக அமையும்.
இது தொடர்பான தெளிவான கொள்கைகளை வகுத்து தமிழகத்தில் முழு மதுவிலக்கு எப்போது ஏற்படுத்தப்படும், எந்தெந்த கால இடைவெளியில் எவ்வளவு கடைகள் மூடப்படும் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய மதுவிலக்கு செயல்திட்டத்திற்கான கால அட்டவணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மதுக்கடைகள் மூடப்படுவதால் வேலை இழக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று அரசு வேலை வழங்குவதற்கான அறிவிப்பையும் அரசு வெளியிட வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.