‘தரமணி’ பற்றி ராம்: “அரேபிய குதிரை – நாயகி! நோஞ்சான் வீரன் – நாயகன்!!”

ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தரமணி’. யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை சதீஷ்குமார் தயாரித்திருக்கிறார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தின் டீஸர் சனிக்கிழமை வெளியாகி இருக்கிறது.
இப்படம் குறித்து இயக்குநர் ராம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
‘தரமணி’ என்னுடைய மூன்றாவது படம். முழுக்க, முழுக்க காதலால் நிறைந்த என்னுடைய முதல் படம். காதலுக்கே உரிய கவிதை உண்டு. வயதைப் பொருட்படுத்தாத மாபெரும் இளமை உண்டு. அடிக்கடலில் நீச்சலிடும் சாகசம் உண்டு. மலையில் இருந்து குதிக்கும் பைத்தியக்காரத்தனமும் உண்டு. அரவணைப்பும் உண்டு, அரக்கத்தனமான சண்டையும் உண்டு. அறம் தாண்டும் இச்சையும் உண்டு, பெரும் வன்மமும் உண்டு. புத்துயிர்த்தலும் உண்டு, ஆண் – பெண் உறவின் அனைத்து சிக்கலும் உண்டு. கடலினும் பெரிய காதலை இப்படி எல்லா வகையிலும் இந்த ஒரு கதைக்குள் முடிந்தவரை நிஜமாக வைத்திருக்கிறேன். அந்த நிஜம் உங்களுக்கு கொண்டாட்டத்தைக் கொடுக்கும். அந்த நிஜம் உங்களைக் காதல் வயப்படுத்தும். அந்த நிஜம் உங்களை பயமுறுத்தும்.
ஒரு வரியில் சொல்வதாக இருந்தால், அந்த நிஜம் உங்களை நீங்கள் காதல் கொண்டவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லும், மன்றாடச் சொல்லும், முத்தம் கொடுக்கச் சொல்லும், கட்டிப்பிடித்துக் காமத்தைக் கடந்து போகச் சொல்லும். இதுவே ‘தரமணி’.
ஆண்ட்ரியா ஜெரிமியா என்பவர் ஓர் அபாரமான நடிகை. தமிழை, தமிழாகவே பேசத் தெரிந்த வெகு சொற்பக் கதாநாயகிகளில் ஒருவர் என்பதை எனக்குத் ‘தரமணி’ அடையாளம் காட்டியது. ‘கற்றது தமிழ்’ ஆனந்தி, அபூர்வ செளம்யாவாக ‘தரமணி’ படத்தளத்தில் மீண்டும் ஒருமுறை எங்களைப் பரவசப்படுத்தினார். பெரும் தாடியோடும், நல்ல உயரத்தோடும் அடர்ந்த குரலோடும் அறிமுகமாகிறார் வசந்த் ரவி.
அடங்க மறுக்கிற ஓர் நேர்மையான அரேபியக் குதிரையாய் ஆண்ட்ரியாவும், அந்தக் குதிரையில் பயணம் செய்யத் தவிக்கிற சராசரிகள் நிறைந்த ஒரு நோஞ்சான் வீரனாய் வசந்த் ரவியும், உங்களை சிரிக்க வைப்பார்கள், ஆட வைப்பார்கள், அதிர வைப்பார்கள், பெரும் பிரியம் கொள்ள வைப்பார்கள்.
இவ்வாறு இயக்குநர் ராம் கூறியுள்ளார்.