ஈழத் தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்க யாழ்ப்பாணம் செல்கிறார் ரஜினிகாந்த்!
ஞானம் அறக்கட்டளை சார்பில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை ஈழத்தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, அடுத்த (ஏப்ரல்) மாதம் 9ஆம் தேதி யாழ்ப்பாணம் நகரில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, இலவச வீடுகளை தமிழ் மக்களிடம் வழங்குகிறார்.
இது குறித்து ஞானம் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் கூறியதாவது:
வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை.
இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி யாழ்ப்பாணம் நகரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது கரங்களால் தமிழ் மக்களுக்கு இந்த புதிய வீடுகளை வழங்குகிறார் ரஜினிகாந்த்.
இலவச வீடுகள் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று ரஜினியிடம் கேட்டபோது, ஈழத் தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்ற காரணத்தினால் உடனே மகிழ்ச்சியுடன் வரச் சம்மதித்தார். அவர் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும்.
இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் வடக்கு மாநில முதல் அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் எஸ்.விக்னேஸ்வரன், பிரிட்டன் அனைத்துக் கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி, ஜஸ்டிஸ் கமிட்டி உறுப்பினர் கீத் வாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.