ரஜினியை அரசியல் தலைமைக்கு முன்னிறுத்தும் திருமாவின் சிக்கல் இது தான்…!

ரஜினிகாந்த்தை அரசியல் தலைமைக்கு முன்னிறுத்துகிறார் திருமா. அவர் அந்த தலைமை எடுக்கலாமே என்ற கேள்விக்கு அந்த நிலை அடைவதற்கான வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காது என்கிறார்.

அந்த பதில் பெருவலி கொண்டது. தீராது முனைந்தும் சமூகத்தின் சாதி கட்டுமானம் தங்களுக்கு அதிகாரத்தை வழங்காது என்கிற நிலையை திருமா அடைந்திருக்கிறார். ஓர் இலக்குக்காக கடுமையாய் உழைத்து ஒரு கட்டத்தில் அது சரி வராது என முடிவு எடுக்கும் சோகத்தின் உச்சநிலை அது.

சமீபகாலத்தின் மிக சிறந்த அரசியல் தலைவராக திருமா உருவெடுத்திருக்கிறார். நிறைய பேரின் கனவுகளுக்கு நம்பிக்கையாக இருப்பவர். புதுச்சமூக பெருங்கனவு ஒன்றின் ஒளிக்கீற்றுகளில் ஒன்று. அவர் அரசியல் தலைமை ஏற்க முடியாதென்பது நமக்கான சாபம்.

உலக மூலதனம் நம் வீட்டு படுக்கையறை வரைக்கும் எட்டி பார்க்கும் சூழலில், பிராந்திய அரசியலை மட்டும் இலக்காக வைத்து செயல்படுவதன் சிக்கல்தான் திருமா மாட்டி கொண்டிருக்கும் சிக்கல். நிலப்பிரபுக்களும் கார்ப்பரெட் முதலாளிகளும் கள்ள உறவு வைத்து கொள்ளும் செயல்திட்டத்தில், திருமாவின் சமூகநீதி அரசியல் மறைக்கப்பட்டு விட்டது.

இந்த ‘மூலதன – நிலப்பிரபுத்துவ’ கூட்டு புரிந்ததால்தான் ‘உயர்சாதியில் இனி அம்பேத்கர் பிறக்க வேண்டும்’ என்கிறார் இயக்குநர் ரஞ்சித். அவர் ஒருவேளை அரசியலில் இருந்திருந்தால், தீர்வு உருவாக்கி இருக்கலாம். ஏனெனில் அவரின் அரசியல் சிவப்பு. ரோகித் வெமுலாவின் அரசியல். கன்னய்யா குமாரின் அரசியல்.

மூலதன – நிலப்பிரபுத்துவ கூட்டுக்கு எதிராக உழைக்கும் வர்க்க – சமூக நீதி அரசியல் கூட்டுத்தான் சரியாக இருக்க முடியும். அது புரிந்ததால்தான் ரோகித்தாலும் கன்னையாவாலும் ‘நீலமும் சிவப்பும் ஒன்றாக வேண்டும்’ என பேச முடிகிறது. அந்த நிறச்சேர்க்கைதான் இந்தியாவின் எதிர்காலமாக இருக்க வேண்டும்.

திருமா கவனிக்க தவறிய இடம் இது. உள்ளூர் நாட்டாமைகள் உலக நாட்டாமைகளுடன் கூட்டு சேர்வார்கள் என்பதையும் அது மிக வலிமையாக கூட்டாக மாறிவிடும் என்பதையும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த சறுக்கல் தமிழினத்தின் சறுக்கலாக மாற போகிறது. அதை அவரே சொல்லவும் செய்கிறார்.

முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கூட்டுக்கு பலியானதுதான், ஒடுக்கப்பட்டோர் அரசியல் அதிகாரம் அடைய வேண்டும் என விரும்பிய திருமாவின் கனவு. அந்த கூட்டு உடைய வேண்டுமென்றால் அம்பேத்கர் இனி உயர்சாதியில் பிறக்க வேண்டும். நீலமும் சிவப்பும் ஒன்றாக வேண்டும்.

 RAJASANGEETHAN JOHN