லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘கூலி’!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171வது படத்தின் பெயர் ‘கூலி’. இத்தலைப்பிற்கான டீசரை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். 3 நிமிடம் பதினாறு நொடிகள் ஓடக்கூடிய ’கூலி படத்தின்’ டீசரில் ரஜினிகாந்தின் மாஸ் என்ட்ரி, அதிரடி காட்சி மற்றும் அசத்தலான பஞ்ச் வசனங்கள் இடம் பெற்று இருக்கின்றன.

இதில் ”அப்பாவும், தாத்தாவும் வந்தார்கள் சென்றார்கள், சரியென்ன தவறென்ன” என ரஜினிகாந்த் பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த வசனத்தை ரஜினிகாந்த் ஏற்கனவே தன்னுடைய ரங்கா திரைப்படத்தில் பேசி இருக்கிறார்.

ரங்கா படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் போலவே, கே.பாலச்சந்தரின் ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் ரஜினிகாந்த் பாடும் ஒரு பாடலிலும் இதே வசன வரிகள், பாடல் வரிகளாக இடம் பெற்றிருக்கின்றன. இந்தப் படத்தின் கதையின் தன்மையுடன் ரஜினிகாந்தின் பழைய வசனம் மற்றும் பாடல் வரி பொருந்திப் போவதன் காரணமாக, தன்னுடைய இந்த படத்தில் அதை வசனமாக சேர்த்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

ரஜினியின் பழைய வசனம் மற்றும் பாடல் வரிகள் தற்போது அவரின் புதிய படத்தில் பஞ்ச் வசனமாக இடம் பெறும் நிலையில், மறுபக்கம் படத்திற்கு ’கூலி’ என தலைப்பு வைத்திருக்கின்றனர். இது 1995ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் சரத்குமார், மீனா நடிப்பில் வெளியான ’கூலி’ படத்தின் தலைப்பை உரிமை பெற்று வைத்திருக்கின்றனர்.

கமல்ஹாசனை வைத்து இயக்கிய ’விக்ரம்’ படத்தில் ‘ஆரம்பிக்கலாமா’ என்ற வசனத்துடன் டைட்டில் டீசரை முடித்த லோகேஷ் கனகராஜ், ’கூலி’ படத்தின் டீசரை ‘முடிச்சிடலாமா’ என ரஜினி பேசும் வகையில் முடித்திருக்கிறார்.

’கூலி’ படத்தின் டீசரை, ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டீசரில் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான காட்சிகள் உள்ளதால் படம் தங்க்க் கடத்தலை மையமாக்க் கொண்டிருக்கும் என தெரிகிறது. LCU ஃபார்மட்டில் போதைப் பொருள் கடத்தல் குறித்து படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது தங்கத்தை மையமாக வைத்து புதிய கதைகளத்தை தொடங்கி இருக்கிறார். இது ஒரு படத்தில் முடியுமா அல்லது அடுத்தடுத்த படங்களிலும் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ரஜினி நடிக்கும் ’கூலி’ படத்துக்கு அனிருத் இசையமைக்க, சகோதரர்கள் அன்பறிவு சண்டைப் பயிற்சி செய்கின்றனர். டைட்டில் டீசர் வெளியான நிலையில் விரைவில் கூலி படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.