அப்போலோ விசிட்: செய்தியாளர்களிடம் சிக்காமல் சிட்டாக பறந்த ரஜினிகாந்த்!

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 25 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், வெளிமாநில அமைச்சர்கள், ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரிகள், திரையுலகினர் உள்ளிட்டோர் தினமும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா பூரண குணம் அடைய ட்விட்டரில் ஏற்கெனவே வாழ்த்துத் தெரிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிய அப்போலோ மருத்துவமனைக்கு நிச்சயம் நேரில் வருவார் என செய்தியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எந்த நாளில், எந்த நேரத்தில் வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது.

நேற்று (ஞாயிறு) மாலை 6.10 மணிக்கு அப்போலோ குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டியின் மகளும், அப்போலோ மருத்துவமனை நிர்வாகிகளுள் ஒருவருமான ப்ரீதா ரெட்டி வந்து, மருத்துவமனையின் கேட்டை முழுவதுமாக திறக்கச் செய்து, பாதைகளை சரி செய்து, காத்திருந்தார்.

திடீரென ஒரு கார் உள்ளே சென்றது.

15 நிமிடங்கள் கழித்து அந்த கார் வெளியே வரும்போது தான், வந்தது ரஜினியும், அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷூம் என்பதை அங்கிருந்த செய்தியாளர்கள் உணர்ந்தனர். செய்தியாளர்கள் நெருங்கி வருவதற்குள் ரஜினியின் கார் சிட்டாக பறந்துவிட்டது. இதனால் ரஜினியை பேட்டி எடுக்க இயலவில்லை.

ரஜினியின் கார் செய்தியாளர்களைக் கடக்கும்போது, அதனுள் ரஜினியும், ஐஸ்வர்யாவும் இருப்பதை புகைப்பட நிருபர் ஒருவர் படம் எடுத்துவிட்டார். அந்த புகைப்படத்தை தான் பெரும்பாலான செய்தியாளர்கள் பகிர்ந்துகொண்டனர். (மேலே உள்ள புகைப்படம்.)

 ரஜினியை பேட்டியும், படமும் எடுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு நழுவிவிட்டதே என நொந்துகொண்ட செய்தியாளர்கள், பின்னர் மருத்துவமனையின் செய்தி தொடர்பாளரை தொடர்புகொண்டு ரஜினி வருகை பற்றி கேட்டறிந்து தகவலை உறுதி செய்தனர்.